தனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரம் அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு ஐடிபிஐ பங்குகளை விற்க முடிவு

புதுடெல்லி: ஐடிபிஐ வங்கியில் உள்ள பங்குகளை விற்பனை செய்ய தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, அமைச்சரவைக் குழு ஒப்புதலுக்குப் பிறகு இதனை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் நடப்பு நிதியாண்டில் 2.1 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தனியார் மயமாக்கலின் ஒரு பகுதியாக, ஐடிபிஐ வங்கியை தனியார் மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. இந்த வங்கியில் மத்திய அரசுக்கு 47.11 சதவீத பங்குகள் உள்ளன.

கடந்த 2019 ஜனவரியில்தான், இந்த வங்கியின் 51 சதவீத பங்குகளை எல்ஐசி நிறுவனம் வாங்கியது. இதன்மூலம் இந்த வங்கியில் எல்ஐசி 21,624 கோடி முதலீடு செய்துள்ளது. இந்நிலையில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் பெற்ற பிறகு ஐடிபிஐ பங்கு விற்பனையைத் தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவால், பங்குச்சந்தையில் ஐடிபிஐ வங்கி பங்குகள் மதிப்பு நேற்று வர்த்தக இடையில் 18 சதவீதம் அதிகரித்து 39.65 ஆக இருந்தது.

Related Stories: