பங்குச்சந்தை வீழ்ச்சியால் அமித்ஷா சொத்து சரிவு : பணக்கார அமைச்சராக வலம்வரும் பியூஸ் கோயல்

புதுடெல்லி, :நடப்பாண்டு பங்குச்சந்தை வீழ்ச்சியால் மத்திய அமைச்சர் அமித் ஷா சொத்து சரிவை கண்டுள்ளது. மற்ற அமைச்சர்களுடன் ஒப்பிடுகையில் பணக்கார அமைச்சராக பியூஸ் கோயல் உள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலர் தங்களது சொத்து விபரங்களை தாமாக முன்வந்து வெளியிட்டுள்ளனர். அதன்படி பிரதமர் மோடியின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஜூன் 30ம் தேதிப்படி 2 கோடியே 85 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.  2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமரின் சொத்து மதிப்பு 2 கோடியே 49 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 36 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. தற்போது மோடியின் சொத்து அல்லது அசையா சொத்துகளின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சம் ஆகும்.

்அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொத்து பட்டியலில், நடப்பு ஆண்டு ஜூன் 30ம் தேதி நிலவரப்படி அவரது நிகரச்சொத்து மதிப்பு ரூ.28 கோடியே 63 லட்சம். கடந்தாண்டு இது ரூ.32 கோடியே 30 லட்சமாக இருந்தது. தற்போது சொத்து மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம், பங்குச்சந்தையின் வீழ்ச்சிதான் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடப்பு ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி அவற்றின் மொத்த மதிப்பு ரூ.13.5 கோடியாகவும், கடந்த ஆண்டு இது ரூ.17.9 கோடியாகவும் இருந்தது.

மேலும், அமித்ஷாவுக்கு ரூ.15.77 லட்சம் கடன்கள் உள்ளன. அமித் ஷாவின் மனைவி சோனல் சொத்து மதிப்பு ரூ.9 கோடியில் இருந்து ரூ.8.53 கோடியாக குறைந்துள்ளது. பங்குகளின் மதிப்பும் ரூ.4.4 கோடியில் இருந்து ரூ.2.25 கோடியாக குறைந்துள்ளது.இதே போன்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அமைச்ர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டவர்களின் சொத்து விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மற்ற அமைச்சர்களை காட்டிலும் பெரும்பணக்காரர்கள் பட்டியில் உள்ளார். அவரிடம் ரூ.27.47 கோடி, அவரது மனைவி சீமா கோயலிடம் ரூ.50.34 கோடி, எச்.யு.எப். என்னும் ஒன்றுபட்ட குடும்ப சொத்து ரூ.45.65 லட்சம் என மொத்த சொத்து மதிப்பு ரூ.78.27 கோடியாகும்.

ஏற்கனவே பதவியில் இருந்து நிதி அமைச்சர்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் குறைவான சொத்துகளே உள்ளன. இவர் கணவருடன் சேர்ந்து ரூ.99.36 லட்சம் குடியிருப்பு, ரூ.16.02 லட்சம் விவசாயம் சாரா நிலம் வைத்துள்ளார். இவரிடம் கார் இல்லை. ஒரு பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் வைத்துள்ளார். 19 வருட வீட்டுக்கடன், 10 வருட அடமானக்கடன் உள்ளன. வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு வெளிநாட்டு வங்கிகளில் ஆறு கணக்குகள் உள்ளன. இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ரூ.2.11 கோடி சொத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: