ஆலையை மூட வேண்டும் என்று முடிவெடுத்தது அரசின் கொள்கை முடிவு: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் ஆணைய உறுதி செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தற்போது தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை பொறுத்தவரையில் தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தனது பதில்மனுவை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு அதற்கு சீல் வைத்தது. இதுகுறித்த அரசாணையும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆலையை மூட தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்று தீர்ப்பு வழங்கனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க தமிழக அரசு, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதில் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை பொறுத்தவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு பதில் மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில்; ஸ்டெர்லைட் ஆலை அங்கு செயல்படுவதன் மூலமாக அதிலிருந்து வெளியாகும் காற்று மட்டுமல்லாமல், அந்த பகுதியில் மாசு ஏற்படுகிறது என்று தனது பதில்மனுவில் கூறியிருந்தது. இந்தநிலையில் தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

ஆலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்தது அரசின் கொள்கையாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை சுற்றுசூழலுக்கு கடும் மாசை  விளைவிக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே அதை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு பிறப்பித்திருக்கிறது.  அதேபோல ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் ஒரு சாராவின் வாதத்தை கேட்டு ஒருதலை பட்சமாக முடிவெடுத்திருக்கிறது என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கருத்து கூறியிருக்கிறது.

அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விஷயம் இல்லை என்று தெரிவித்திருக்கிற தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை விவாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அந்த மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்ய வேண்டும். அவர்களுடைய அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்திருக்கிறது.

Related Stories: