இன்று சர்வதேச கை கழுவுதல் தினம் உங்க கை மட்டும் ரொம்ப சுத்தமா? அப்ப நீங்க தான் பெரிய சேமிப்பாளி

நெல்லை: உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்களும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் தொடர்ந்து மக்களை அறிவுறுத்தி வருகின்றனர். பணியிடம் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து நம் கைகளில் ஒட்டியிருக்கும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகளான வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுக் கிருமிகள் நமது வாய், மூக்கு, கண் போன்ற உறுப்புகள் வழியாக உடலுக்குள் செல்வதால் கிருமித் தொற்று ஏற்படுகிறது. இதுபோன்ற தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு சரியான முறையில் கைகளை அடிக்கடி கழுவுவது அவசியம்.

உணவை சமைக்க, பரிமாற மற்றும் உண்ணத் தொடங்கும் முன்னும், கைகள் அழுக்காக இருக்கும் போதும், கழிவறையைப் பயன்படுத்திய பின்னும், செல்லப் பிராணிகளையும் பிற விலங்குகளையும் தொட்ட பின்னும், வெளிப்புற வேலைகளுக்குப் பின், நோயாளிகளைச் சந்திக்கும் முன்னும் பின்னும், இருமல், தும்மல், மூக்குப் பிடித்த பின், குப்பையைக் கையாண்ட பின், காலணிகளை பாலிஷ் செய்த பின், பொதுப் போக்குவரத்தில் சென்று வந்த பின், ரூபாய் நோட்டுகளை எண்ணிய பின் என எல்லா காரணங்களுக்காகவும் நம் கைகளைக் கழுவுவது நல்லது.

நம் கைகளில் உள்ள தோல் உலராமல் இருக்க மென்மையான சோப்பைப் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் கைகளுக்கு ஈரப்பசை அளிக்கும் லோசனை பயன்படுத்தலாம். கைகளைக் கழுவிய பின்பு சுத்தமான காட்டன் துண்டினைக் கொண்டு ஒற்றி எடுப்பது நல்லது. தண்ணீரோ, சோப்போ இல்லாத போது  சானிடைசரை பயன்படுத்தலாம். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்யும்போது, உள்ளங்கை நிறைய சானிடைசரை எடுத்து கைகளின் எல்லா பகுதியிலும் பூச வேண்டும். கைகள் காய்ந்தபின் சுத்தமாக இருக்கும். சரியான முறையில் கை கழுவுவதால் நமது நாட்டின், வீட்டின் வரவு செலவில் எவ்வளவு பெரிய சேமிப்பு உண்டாகிறது என்பதை எண்ணிப்பார்த்து, இந்த சர்வதேச கைகழுவுதல் தினத்தில் இப்பழக்கத்தைக் நாம் அனைவரும் கடைப்பிடிக்கத் தொடங்குவோம்.

Related Stories: