வேலூரில் விஜிலென்ஸ் அதிரடி சோதனை சுற்றுச்சூழல் முதன்மை பொறியாளர் வீட்டில் ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல்: 3.6 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி, பத்திரங்களும் சிக்கியது

வேலூர்: வேலூர் மண்டல சுற்றுச்சூழல் முதன்மை பொறியாளர் வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் நடத்திய ரெய்டில் ரூ.3 கோடி ரொக்கம், 3.6 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி, நில ஆவண பத்திரங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூர் காந்தி நகர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்த பன்னீர்செல்வம்(51) இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் அருகில் உள்ள விருதம்பட்டில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணிக்கு சென்று வருகிறார். இவரது கட்டுப்பாட்டின்கீழ் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, வாணியம்பாடி, விழுப்புரம், ஓசூர் ஆகிய பகுதிகளில் புதிதாக கம்பெனி, பள்ளி, தியேட்டர், வணிக வளாகம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி பெறுவது, புதுப்பித்தல், பெயர் மாற்றம் போன்ற பணிகள் நடந்து வந்தது.

இதற்காக வருபவர்களிடம் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் மூலமாக முறைகேடாக பணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான விஜிலென்ஸ் போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தி முதன்மை பொறியாளரின் காரில் இருந்தும், அவரது வாடகை வீட்டில் இருந்தும் ரூ.33.73 லட்சத்தை கைப்பற்றி, பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான வீட்டுக்கு நேற்று சென்றனர். வீட்டில் இருந்த யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இரவு 8 மணி வரை நடந்த சோதனையில் ரூ.3 கோடி ரொக்கம், 3.6 கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் நில ஆவண பத்திரங்கள், வங்கி பண பரிவர்த்தனைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னதாக, பணத்தை எண்ணுவதற்கான இயந்திரங்கள் மற்றும் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை எடைபோடுவதற்காக நகை எடைபோடும் கருவியை அதிகாரிகள் கொண்டு சென்றனர். அதைகொண்டு பல மணிநேரமாக நகை மற்றும் பணம் கணக்கிடும் பணி நடக்கிறது. அதனால், கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு, நள்ளிரவில் அதிகரிக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து  சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: