சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கான முதல்கட்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், தேர்தலில் கதாநாயகனாக திகழும் தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுகவில் 8 பேர் கொண்ட குழுவை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கடந்த 11ம் தேதி அறிவித்தார். இந்த குழுவில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பேராசிரியர் அ.ராமசாமி ஆகிய 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு மாநிலம் முழுவதும் சென்று கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், மக்களிடம் ஆலோசனை கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும். தமிழகத்திற்கு என்று மொத்தமாக ஒரு தேர்தல் அறிக்கையும், தொகுதிகளுக்கு என்று ஒரு தேர்தல் அறிக்கையையும் தயாரித்து கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கும். அதன் பிறகு ஆய்வு செய்யப்பட்டு தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிடுவார். இந்த குழு மக்களை சந்திக்கும் முன்பாக அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்த முடிவு செய்தது. அதன்படி இந்த குழுவின் முதல்கட்ட கூட்டம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று கூடியது. கூட்டத்தில் குழு ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு உட்பட 8 பேரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தனர். எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் என்பதால், தற்போதைய அரசியல் சூழ்நிலை, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத மக்களின் திட்டங்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்து தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து விவாதித்தனர். வரும் சட்டமன்ற தேர்தலில் மக்களுக்கு தேவையான முக்கிய அம்சங்கள் இடம்பெறச் செய்வது குறித்து குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். குறிப்பாக, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, காவல்துறையினருக்கு விடுமுறை, அரசு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை,  பூரண மதுவிலக்கு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை இடம்பெற செய்வது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

கூட்டத்துக்கு பின்னர் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2021ல் நடைபெற உள்ள சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரிடம் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொதுஅம்சங்கள் குறித்தும், தங்கள் மாவட்டத்தில் பிரச்னைகள் குறித்தும் இடம்பெற வேண்டிய சாராம்சங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க விரும்பும் திமுக நிர்வாகிகள், தோழர்கள், தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம். அத்துடன், மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க விரும்புவோர் “manifesto2021@dmk.in”  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் மக்களுக்கு தேவையான முக்கிய அம்சங்கள் இடம்பெறச் செய்வது குறித்து குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

Related Stories: