ஜிஎஸ்டி நிலுவை தொகை தற்போது சாத்தியமில்லை கூடுதல் கடன் வாங்க தமிழகத்திற்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டி நிலுவை தொகை தற்போது அளிக்க வாய்ப்பு இல்லை என்பதால், வெளிச்சந்தையில் ரூ. 9 ஆயிரத்து 627 கோடி கூடுதல் கடன் வாங்கிக்கொள்ள தமிழகத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது வரை அதிகரித்து வருகிறது. இதில், தடுப்பூச்சி சோதனை ஒருபக்கம் நடந்து வந்தாலும், தொற்றின் தீவிரத்தை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவ உள்கட்டமைப்பிற்காக தமிழகம் உட்பட மொத்தம் 22 மாநிலங்களுக்கு 2ம் கட்ட தொகையாக ரூ. 890.32 கோடியை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் விடுவித்திருந்தது.

இதில், குறிப்பாக மாநிலங்களில் உள்ள வைரஸ் பாதிப்பு எவ்வளவு என்பதை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்றவாறு தொகையான பிரித்து கொடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேப்போன்று கொரோனா தடுப்பு செலவுகளை சமாளிக்க மாநிலங்கள் அதன் பேரிடர் நிதியில் இருந்து 50 சதவீதம் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் கடந்த 25ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகமும் குறிப்பிட்டிருந்தது. இதில், கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட ஜிஎஸ்டி கூட்டத்தில், வரி வருவாய் இழப்பை சரிகட்ட மாநிலங்கள் வெளிச்சந்தையில் கடன் வாங்க மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனை தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்கியிருந்தனர். இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் தரப்பில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘ஜி.எஸ்.டி நிலுவை தொகை தற்போது அளிக்க வாய்ப்பு இல்லை என்பதால், வெளிச்சந்தையில் ரூ. 9 ஆயிரத்து 627 கோடி கூடுதல் கடன் வாங்கிக்கொள்ள தமிழகத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை தற்போது கிடைக்க வாய்ப்பில்லை’ என்பது தெரியவந்துள்ளது.

Related Stories: