திருச்செந்தூர் முருகன் கோயிலில் மேற்கூரை வசதியின்றி வெயிலில் கருகும் பக்தர்கள்: அடிப்படை வசதியும் இல்லாததால் கடும் அவதி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்கள் மேற்கூரை வசதியின்றி இலவச தரிசனத்திற்கு வெயிலில் கருகும் அவலம் உள்ளது. அத்துடன் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் முறையாக செய்துதரப்படாததால் பெரிதும் அவதிப்படுகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த செப்டம்பர 1ம்தேதி முதல் பக்தர்கள் தரி சனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இலவச மற்றும் ரூ.100 கட்டணத்தில் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் கார் மற்றும் வேன்களில் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இவை தவிர தற்போது பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பஸ்களிலும் ஏராளமானோர் கோயிலுக்கு வருகின்றனர். எனினும் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்புகின்றனர். முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய காலை முதலே நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வரும் இவர்கள், கோயில் டோல்கேட் அரு கில் வெயிலில் குழந்தைகளுடன் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு அமர்ந்து சாப்பிடுவற்கு இடவசதியோ, குடிநீர், கழிப்ப றை வசதியோ செய்து தரப்படவில்லை. நீண்டநேரம் வெயிலில் காத்திருப்பதால் ஒருசில பெண்கள் மயங்கி விழுந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளன. அதுவும் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் சொல்லவே வேண்டாம். எனவே முன்பதிவு செய்யாமல் வரும் பக் தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கலையரங்கம் பகுதியிலோ அல்லது வசந்த மண்டபம் பகுதியிலோ உட்காருவதற்கு இடவசதி செய்து கொடுப்பதோடு,

அவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து தரிசனத்திற்காக மதுரையில் இருந்து குடும்பத்துடன் வந்த பக்தர் ஒருவர் கூறுகையில், ‘‘நாங்கள் மதுரையில் இருந்து குடும்பத்துடன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பஸ்சில் வந்தோம். ஆன்லைனில் முன்பதிவு செய்யவில்லை. முன்பதிவு செய்யாதவர்களுக்கு மாலை 3 மணி முதல் 5 மணி வரை தான் அனுமதி வழங்கப்படும் என்று கூறுகிறார்கள்.

நாங்கள் காலை 8 மணிக்கே வந்து விட்டோம். அப்போதே கோயிலில் சாமி தரிசனம் செய்ய டோல்கேட் அருகில் நீண்ட வரிசை காணப்பட்டது.

பந்தல் வசதி கூட செய்து கொடுக்கவில்லை. வெயிலில் எவ்வளவு நேரம் தான் நிற்க முடியும். அதுவும் பெண்கள், குழந்தைகளின் நிலைமையை சொல்லவே வேண்டாம். குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. எனவே ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்க அந்த இடத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும். அதேவேளையில் குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும்’’ என்றார்.

நாய் தொல்லை அதிகரிப்பு

திருச்செந்தூர் கோயில் வெளிப்பிரகாரம் மற்றும் பஜார் பகுதியில் தற்போது அதிக எண்ணிக்கையிலான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் அவ்வப்போது ஒன்றொடொன்று சண்டையிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. சிறு குழந்தைகள் கையில் வைத்திருக்கும் தின்பண்டங்களையும் பிடுங்கிச் சென்று விடுகின்றன. எனவே நாய்களை கட்டுப்படுத்த கோயில் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: