ஆற்காடு நவாபின் பட்டப்பெயரே வாலாஜா அகத்திய மாமுனிவர் வழிபட்ட அகத்தீஸ்வரர் கோயில்

தொண்டை மண்டலம் என்று அழைக்க கூடிய ஒருங்கிணைந்த வடஆற்காடு மாவட்டம் (வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட) பல  சான்றோர்களையும், ஆன்றோர்களையும் ஈன்றெடுத்த பூமி. காஞ்சிக்கு அடுத்தபடியாக விண்ணளாவிய  கோபுரங்களையும், ஆலயங்களையும் தன்னகத்தே கொண்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பழமைக்கும்  புதுமைக்கும் பாலமாக அமையப்பெற்ற ஊர். வேத காலத்தில் அகத்திய மாமுனிவர் தவமிருந்து ஈஸ்வரனை வழிபட்ட அகதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலின்  மகத்துவத்தை பிரதிபலிக்கும் வண்ணம் இப்பகுதிக்கு அகதீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. ஆற்காடு நவாப்பின் பிரதான  அமைச்சராக இருந்த அச்சண்ணா பண்டிதர் என்பவர் வன்னிவேடு ஒட்டியுள்ள பகுதியில் புதிய நகரத்தை நியமனம் செய்தார்.  அதற்கு ஆற்காடு நவாப்பின் பட்ட பெயரான வாலாஜா என்ற பெயரை இவ்வூருக்கு சூட்டினார்.

வாலாஜாவிற்கு முக்கியத்துவம் கிடைக்க இதை வணிக நகரமாக உருவாக்கினார். இங்கு உப்புப்பேட்டை, பஞ்சுப்பேட்டை,  சவுகார்ப்பேட்டை, சுவர்ணப்பேட்டை, வெத்தலைப்பேட்டை, பாக்குப்பேட்டை உள்ளிட்ட 16 பேட்டைகள் அமைக்கப்பட்டது.  நாடுமுழுவதும் குறிப்பாக வட இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து பண்டமாற்று முறையில்  வியாபாரம் செய்தனர். வியாபாரத்தில் கொடி கட்டி பறந்த இந்த ஊரில் பன்மொழி பேசும் மக்களான தமிழ், தெலுங்கு, கன்னடம்,  மராட்டி, சவுராஷ்ரா மற்றும் உருது பேசும் இஸ்லாமியர்கள் உள்ளிட்டோர் வசித்து வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 1866 ஆம்  ஆண்டு தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் நகராட்சி வாலாஜா. இந்த ஊர் பிரான்சு நாட்டு பொறியாளரால் நிர்மானம் செய்யப்பட்டது.

அதன்படி பாண்டிச்சேரியை போல் நீண்ட தெருக்கள் பிரதான சாலையை இணைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டது. மேலும்  மழைக்காலங்களில் வடிகால் வசதி மழைநீர் தேங்காத அளவிற்கு கழிவுநீர் செல்லும் கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இத்தனை சிறப்புகள் வாய்ந்த நகராட்சி 1866 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  47,498 பேர். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.6சதவீதம் மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,028 பெண்கள்் உள்ளனர்.  

தமிழகத்தில் உள்ள மதுரை, தற்போது ஆந்திராவில் உள்ள ஆதோனி ஆகிய 3 நகராட்சிகளும் சென்னை மகாணத்தில்  முன்னோடியாக திகழ்ந்தது. மதுரையும், ஆதோனியும் மாநகராட்சியாக மாறிவிட்டது. 1966 ஆம் ஆண்டு நகராட்சி சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடிய வாலாஜா நகராட்சி தற்போது போதிய வருவாய் இன்றி 2ம்  நிலையில் உள்ளது.

எந்தவித அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லாமலும் அரசாங்கத்தின் மானியத்தை மட்டும் நம்பியுள்ளது. வெறும்  2சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வாலாஜா நகராட்சி ெபரிய வணிக நிறுவனங்களோ, தொழிற்சாலைகளோ இல்லை. மேலும் நடைபாதை கடைகளும் புதியதாக கட்டிடம் கட்டுபவர்களுக்கும் தெருக்களை ஆக்கிரமித்து இருப்பதால்  பாதசாரிகள் நடந்து செல்வதற்கே சிரமப்படுகிறார்கள். இவையெல்லாம் ஓருபுறம் இருக்க 150வது ஆண்டு விழாவினை  சிறப்பாக கொண்டாடவும், மேலும் நகரின் வளர்ச்சிக்காக அரசாங்கத்திடம் நிதியும் கோரப்பட்டது இதுவரை எவ்வித நிதியும்  வழங்கப்படவில்லை. இப்படி வாலாஜா நகராட்சிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி, ஒருங்கிணைந்த பஸ்நிலையம் அமைக்க வேண்டும். என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை, புதிய உள்ளாட்சி உறுப்பினர்கள் பதவியேற்ற பின்பாவது வாலாஜா நகராட்சி மீது அரசு தனி கவனம் செலுத்தி  நகரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.

ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும் ஊர்

ெதாண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக வாலாஜா ஆன்மீகத்தின் கேந்திரமாக விளங்குகிறது. எங்கு  பார்த்தாலும் திருக்கோயில்கள் ஆண்டு தோறும் விழாக்கள் நடைபெற்று வருகிறது. காசிவிஸ்வநாதர் கோயில் இதேபோல்  வாலாஜா ஏகாம்பரநாதர் கோயிலில் தேர் திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இங்குள்ள படவேட்டம்மன்  கோயிலில் ஆடி மாதம் 4வது வெள்ளிக்கிழமை அன்று மிகப்பெரிய திருவிழா நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.

வாலாஜாவில் உள்ள பச்சையம்மன் கோயில் புகழ் பெற்றதாகும். இங்குள்ள வாமுனி, செம்முனி சிலைகள் ஊரின் காவல்  தெய்வங்களாக போற்றி வணங்கப்படுகிறது. சத்திரபதி சிவாஜி வழிபட்ட பவானி அம்மன் மல்லிகேஸ்வரர் கோயில் வாலாஜா  மெயின் ரோட்டில் உள்ளது. ஆண்டு தோறும் நவராத்திரி 9 நாட்களும் பூஜைகள் நடைபெறும். விஜயதசமிநாளில் 20 அடி  கொம்பின் அடிப்பகுதியில் உள்ள பீடத்தில் மல்லிகேஸ்வரர் சுவாமியை தலையில் வைத்து பக்தர்கள் நடனம் ஆடுவார்கள்  இதற்கு காட்டி உற்சவம் என்று பெயர். இதை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆந்திரா, கர்நாடகா போன்ற  மாநிலங்களில் இருந்து வருவார்கள்.

முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன் கல்விபயின்ற ஊர்

தமிழகத்திலே முதலாவதாக துவங்கபட்ட நகராட்சி வாலாஜா ஆகும். அதே போல் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  நகராட்சி சார்பில் முதன்முதலாக கடந்த 1887 ஆம்ஆண்டு உயர்நிலைபள்ளி தொடங்கப்பட்டது. வாலாஜாவில் இந்த பள்ளியில்  உலக தத்துவஞானியும், இந்திய குடியரசு தலைவருமான டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழ் மூதறிஞர் மு.வ. என்கிற  மு.வரதராசனார், இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத், ஐ.ஏ.எஸ் அதிகாரி விசுவநாதன், உள்ளிட்டோர் கல்வி பயின்ற  ஊராகும். மேலும் மாவட்டத்திலே அரசு மருத்துவமனை வாலாஜாவில் ஆரம்பிக்கப்பட்டது. வேலூர் மாவட்ட கலெக்டராக  பணிபுரிந்த பெல்லியப்பாவால் வாலாஜாவில் மகளிருக்காக தனி அரசு கல்லூரி அமைக்கப்பட்டது.

மஞ்சள்காமாலை நோய்குணப்படுத்தும் வாலாஜா

நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு  இடங்களிலிருந்து ஞாயிற்றுகிழமைகளில் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை வாலாஜா பஸ் நிலையத்திலிருந்து  சாரை சாரையாக பூசாரி பச்சையப்பன் தெருவில் உள்ள அந்த வீட்டை நோக்கி செல்கிறார்கள். அங்கு வரிசை கட்டி நிற்கிறார்கள்.  அந்தநோயை குணப்படுத்தும் பச்சிலை மருந்தை வெண்ணெயில் வைத்து 3உருண்டைகளாக கொடுக்கிறார்கள். நோயாளிகள்  அதிகபட்சமாக இரண்டே வாரத்தில் குணமாகிவிடுகிறார்கள்.

கார்பரேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், அலோபதி மருத்துவத்தால் கைவிடப்பட்டவர்கள் இங்கு வந்து  வைத்தியம் பெற்று நல்லபடியாக வீடுதிரும்புகிறார்கள். பலவரலாற்று சிறப்புகளை கொண்ட வாலாஜா கொடிய நோயான  மஞ்சள்காமாலை நோய் தீர்க்கும் கற்பக விருட்சமாக காமதேனுவாக விளங்கி கொண்டிருக்கிறது. இரண்டு தலைமுறையாக  மக்களுக்காக சேவையாற்றிவரும் அந்த குடும்பத்தினரை லட்சக்கணக்கான மக்கள் பாராட்டி வருகின்றனர்.

க.சுந்தரம், திமுக தலைமை கழக செயற்குழு உறுப்பினர்: குடிநீர் ஆதாரத்திற்காக பாலாற்றை நம்பியே பல லட்சம் மக்கள் வாழ்ந்து  வருகிறார்கள். சட்டவிரோதமாக 20அடி ஆழத்திற்கு மேல் பாலாற்றில் மணல் எடுத்து விட்டதால் நீராதாரம்  அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. ஆகவே எதிர்காலத்தில் மணல்  எடுப்பதை அறவே தடுத்து நிறுத்த வேண்டும். இதேபோல் அனைத்து கனிமவளத்தையும் காக்க அரசு உரிய நடவடிக்கை  எடுக்கவேண்டும்.

சேஷா வெங்கட், வாலாஜா ஒன்றிய திமுக செயலாளர்: புதியதாக தொடங்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள  மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை மற்றும் வாலாஜா பகுதிகளுக்கு, வேலூரில் இருந்து சென்னை, காஞ்சிபுரம் பகுதிக்கு  செல்லும் பஸ்கள் இந்த ஊர்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ள  எம்பிடி சாலையில் சாலையை கடக்க வேண்டியுள்ளதால், அதிகளவு விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படுகிறது. எனவே  அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

டபிள்யூ.ஜி.முரளி, அதிமுக முன்னாள் நகராட்சி கவுன்சிலர், வாலாஜா: வாலாஜா பட்டு சேலை உற்பத்தி தேக்க நிலையில் உள்ளது.  தற்போது சீனாவின் கச்சா பட்டை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே பட்டுப்பூச்சி உற்பத்தி மையம் தொடங்குவதற்கு  நவீன ெதாழில்நுட்ப பயிற்சியும், வேண்டிய உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும். பட்டுசேலை  உற்பத்தியாளர்களுக்கு வேண்டிய வங்கி கடனுதவியும் வெளிநாடுகளுக்கு ஏற்றமதி செய்ய ஆலோசனைகளையும்  வழங்க வேண்டும்.

Related Stories: