ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி காவிரி ஆற்றில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்

கும்பகோணம்: ஊக்கத்தொகை விலையை உயர்த்தி கேட்டு கும்பகோணம் காவிரி ஆற்றில் நெல்லை கொட்டி விவசாயிகள்  நேற்று போராட்டம் நடத்தினர்.காரீப் சந்தை பருவத்துக்கான ஆதார மற்றும் ஊக்கத்தொகை அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் மறு பரிசீலனை செய்து  அறிவிக்ககோரி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காவிரி ஆற்றில் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில்  மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையிலும், மாவட்ட செயலாளர் சுந்தரவிமல்நாதன் முன்னிலையிலும்  விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து கும்பகோணம் ஆர்டிஓ  விஜயனிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.இதுகுறித்து சுந்தரவிமல்நாதன் கூறியதாவது: நடப்பாண்டு காரீப் சந்தை பருவத்துக்கான நெல் கொள்முதல் விலையில்  மத்திய அரசு கிலோ ஒன்றுக்கு 53 பைசா, தமிழக அரசு 50 பைசா உயர்த்தி ஊக்கத்தொகையாக அறிவித்திருப்பது  வேதனையளிக்கிறது.

கேரளாவில் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,795, சத்தீஸ்கரில் ரூ.2,500 வழங்கினர். தமிழகத்தில் சன்ன  ரகத்துக்கு ரூ.1,905, பொது ரகத்துக்கு ரூ.1,865 வழங்கியது முறையற்றது என தஞ்சைக்கு செப்டம்பர் 28ம் தேதி வந்த தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்தோம். ஆனால் சிறிதுகூட பரிசீலிக்காதது, விவசாயிகள் மீது அரசுக்கு அக்கறை  இல்லை என்பதை காட்டுகிறது. இதேபோன்று மத்திய அரசு 2018-2019ல் நெல் குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தி வழங்கியது. ஆனால்  இந்தாண்டு வெறும் 53 பைசா விலையை உயர்த்தி அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள்  விவசாயிகள் மீது அக்கறை கொண்டு நெல்லுக்கான ஆதார மற்றும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க மறு பரிசீலனை செய்ய  வேண்டும் என்றார்.

Related Stories: