வீட்டை காலி செய்ய வைத்ததால் ஆத்திரம் ஒர்க்‌ஷாப்புக்கு தீ மெக்கானிக் பலி: வெறிச்செயலில் ஈடுபட்ட வெல்டர் கைது

தூத்துக்குடி: வீட்டை காலி செய்ய வைத்ததால் நள்ளிரவில் ஒர்க் ஷாப்பிற்கு வெல்டர் தீவைத்தார். இதில் மெக்கானிக் கருகி பலியானார். தூத்துக்குடி, காட்டன் ரோடு, 25 வீடு காம்பவுண்ட்டில் வசித்தவர் அண்ணாமலை (42). மாடியில் குடியிருந்து, கீழ்ப்பகுதியில் டூ வீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வந்தார். அதே காம்பவுண்டில் பக்கத்து வீட்டில் வசித்த வெல்டரான மரிய அந்தோணி தினேஷ் மெண்டிஸ் (45) என்பவர் தினமும் போதையில் தகராறு செய்து வந்தார்.

அண்ணாமலை மற்றும் அங்குள்ளவர்கள் வலியுறுத்தியதன் பேரில் அந்த வீட்டின் உரிமையாளர் தினேஷை காலி செய்ய வைத்தார். இதனால் அவர் அருகில் உள்ள தெருவில் குடியேறினார்.

வீட்டை காலி செய்ய வைத்துவிட்டாரே என்ற ஆத்திரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு அண்ணாமலையின் ஒர்க் ஷாப்பிற்கு வெளியே நிறுத்தியிருந்த பைக்குகளுக்கு தினேஷ் தீ வைத்து விட்டு தப்பினார். ஒர்க் ஷாப்பில் பிடித்த தீ, அறைக்கதவு மூலம் மாடிக்கும் பரவியது. மாடியில் படுத்திருந்த அண்ணாமலை, மனைவி கெங்காதேவி (38), இளைய மகன் நிகில் (4) ஆகியோரை மீட்டு பக்கத்து வீட்டு மாடி வழியாக அனுப்பினார். மூத்தமகன் நித்தினும் (8), அண்ணாமலையும் வீட்டுக்குள்ளேயே மயங்கிக் கிடந்தனர். தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தபோது அண்ணாமலை வீட்டிற்குள்ளேயே இறந்து கிடந்தார். போலீசார்  தினேஷை கைது செய்தனர்.

Related Stories: