மணல் கடத்தலை தடுக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: மணல் கடத்தலை தடுக்காத திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ஐ.காதர்மைதீன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தல் நடந்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும். திருட்டு மணல் எடுப்பதை கண்காணிக்க ட்ரோன் கேமராவை பொருத்த வேண்டும். தினமும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 500 லாரிகளில் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. மூன்று ஆண்டுகளாக மணல் குவாரிகளே  இயங்காத நிலையில் பல லட்சம் டன் மணல் சோழவரம், பொன்னேரி, கவரப்பேட்டை, ஆரம்பாக்கம் ஆகிய பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மணல் கடத்தலுக்கு அதிகாரிகள் துணை போவதோடு மட்டுமல்லாமல், பொய் வழக்கு பதிவு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. மேலும், இன்னும் ஒரு மாதத்திற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மணல் மற்றும் எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யுவராஜ் எஸ்.தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மணல் மற்றும் எம் சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.  

Related Stories: