மலையாள நடிகர் சங்க படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு இல்லை

திருவனந்தபுரம்: மலையாள சினிமா நடிகர் சங்கம் சார்பில் கடந்த 2008ம் ஆண்டு டுவென்டி 20 என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கப்பட்டது. நடிகர் சங்க வளர்ச்சிக்காக இந்த படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப், பிரித்விராஜ் உள்பட பெரும்பாலான நடிகர்களும், பாவனா, நயன்தாரா, கோபிகா உள்பட முன்னணி நடிகைகளும் நடித்திருந்தனர். இந்தப்படம் அப்போது சூப்பர் ஹிட்டாக ஓடியது. இந்த படத்தில் நடிக்க எந்த நடிகர், நடிகைகளும் சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஏராளமான நடிகர் நடிகைகள் வாய்ப்பில்லாமல் அவதிப்பட்டு வருவதால் அவர்களுக்கு உதவுவதற்காக மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க மலையாள நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மலையாள நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபு கூறுகையில், ‘‘மலையாள நடிகர் சங்கம் சார்பில் 2வது படம் விரைவில் தயாரிக்கப்பட உள்ளது. இந்தப் படத்தில் முதல்படமான டுவென்டி 20ஐ போலவே அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்க உள்ளனர். ஆனால் நடிகை பாவனாவுக்கு இந்த படத்தில் வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. அவர் தற்போது நடிகர் சங்க உறுப்பினராக  இல்லை. இறந்தவர் எப்படி திரும்ப வர முடியும்? எனவே அந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது’’ என்றார். இந்த கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

* நடிகை பார்வதி ராஜினாமா

மலையாள நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபுவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல மலையாள நடிகை பார்வதி, நடிகர் சங்கத்தில் இருந்து நேற்று அதிரடியாக ராஜினமா செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து எனது நண்பர்கள் வெளியேறினர். ஆனால் நான் சங்கத்தில் தொடர்ந்தேன். மோசமான நிலைக்கு செல்லும் நடிகர் சங்கத்தை சீர்படுத்த சிலராவது வேண்டும் என்பதால் தான் நான் சங்கத்தில் தொடர்ந்தேன். ஆனால் தற்போது சங்க செயலாளர் இடைவேளை பாபு கூறியதை கேட்டு இனி இந்த சங்கத்தில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை போய்விட்டது. நடிகர் சங்கம் கைவிட்ட ஒரு பெண் உறுப்பினரை இறந்து போனதாக கூறியது வெட்கக்கேடானது. அவரது வார்த்தையை ஒருபோதும் திருத்த முடியாது. எனவே நான் ராஜினாமா செய்கிறேன். இடைவேளை பாபுவும் ராஜினாமா செய்யவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்’’ என்றார்.

Related Stories: