மதுரை அருகே நள்ளிரவில் பயங்கரம் அதிமுக ஊராட்சி தலைவர் உட்பட 2 பேர் படுகொலை: செயலாளரிடம் விசாரணை

மதுரை: மதுரை கருப்பாயூரணி அருகே அதிமுகவை சேர்ந்த ஊராட்சி தலைவர் மற்றும் பணியாளர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக செயலாளர் உட்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை, கருப்பாயூரணி அருகே குன்னத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் ராஜன்(48). மனைவி சித்ரா. குழந்தைகள் இல்லை. இவர், குன்னத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வானார். பின்னர் அதிமுகவில் இணைந்தார். இதே ஊரைச் சேர்ந்தவர் முனியசாமி (43). இவர் ஊராட்சியில் தண்ணீர் திறந்து விடும் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். மனைவி இந்திரா. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நண்பர்களான கிருஷ்ணன் ராஜன், முனியசாமி இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் குன்னத்தூர் கண்மாய்  அருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு டூவீலர்களில் வந்த மர்ம கும்பல், ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் ராஜனை சுற்றிவளைத்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால்  வெட்டினர். தடுக்க முயன்ற முனியசாமியையும் வெட்டினர். தப்பியோட முயன்றவர்களை ஓட ஓட விரட்டி,  தலை, கழுத்து, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.நேற்று காலை அப்பகுதிக்கு சென்ற கிராம மக்கள், இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

 தகவலறிந்து மதுரை எஸ்பி சுஜித் குமார் மற்றும் கருப்பாயூரணி போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த கண்மாய் கரையில் கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மதுரை - சிவகங்கை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை எஸ்பி சுஜித்குமார் சமாதானம் செய்து அனுப்பினார். இரட்டைக் கொலை நடந்த இடம் சிவகங்கை மாவட்ட எல்லைக்கு மிக அருகில் என்பதால், அந்த மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இரு மாவட்டங்களுக்கும் இடையே உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் நேற்று காலை முதல் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டன.

போலீசார் கூறும்போது, ‘‘கிருஷ்ணன் ராஜன் பொறுப்பு ஏற்ற பின்னர் ஊராட்சி மன்றத்தில் பல்வேறு முறைகேடுகளை கண்டுபிடித்து ஊராட்சி செயலாளர் வீரணன் என்ற பால்பாண்டியிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதுதொடர்பாக கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திலும் புகார் அளித்துள்ளார். வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த ஆத்திரத்தில் தான் ஆட்களை வைத்து கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வீரணன் மற்றும் கடந்த முறை தலைவருக்கு போட்டியிட்ட திருப்பதி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்றனர்.

Related Stories: