தஞ்சை சுற்றுலா மாளிகையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வைத்திலிங்கம் எம்பி ரகசிய ஆலோசனை

தஞ்சை: சுற்றுலா மாளிகையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் நேற்று ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டதால் தஞ்சையில் அதிமுக வட்டாரத்தில் குழப்பம்  நிலவுகிறது. தஞ்சை புதிய சுற்றுலா மாளிகையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் நேற்று காலை முதல் மாவட்டத்திலுள்ள முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். பின்னர், மதியம் 12 மணியளவில்  திருச்சியை சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சுற்றுலா மாளிகைக்கு வந்தார். அப்போது அனைத்து நிர்வாகிகளையும் வெளியில் அனுப்பி விட்டு இருவரும் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டனர். முன்னதாக  திருவையாறு முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமி ஆலோசனையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மதியம் 12 மணிக்கு வந்த அமைச்சர் வெல்லமண்டிநடராஜன் ஆலோசனை முடிந்து 12.23 மணிக்கும், இவரை தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ  ரத்தினசாமியும் புறப்பட்டு சென்றனர்.

இதனால் அதிமுக வட்டாரத்தில் குழப்பம் இருந்து வருகிறது. 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவில், திருவாரூரை சேர்ந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜை சேர்த்து விட்டு தஞ்சையை சேர்ந்த  வைத்திலிங்கத்தை சேர்க்காததால் டெல்டா மாவட்டத்திலுள்ள இவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும் தகவலின் அடிப்படையிலும், வரும் சட்டமன்ற தேர்தலில் சசிகலா தரப்பிலிருந்து போட்டியிட்டால் எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 சசிகலா வெளியில் வந்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் தனது ஆதரவாளர்கள் யார் யார் சமாளிப்பாளர்கள், சசிகலா குடும்பத்துடன் தொடர்பில் உள்ள அதிமுகவினர் யார் என்பது குறித்தும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுடன்  ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.தகவல் தெரிந்து பத்திரிகையாளர்கள் சென்றபோது பேட்டி இல்லை என்று வைத்திலிங்கம் கூறியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சரும் தற்போதைய அமைச்சரும் ரகசியமாக தங்களது ஆதரவாளர்களுடன்  ஆலோசனை நடத்தியது, அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: