முதுகுளத்தூரில் ரூ.18 கோடியில் புறவழிச்சாலை பணிகள்: 50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்

சாயல்குடி: முதுகுளத்தூர் பகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான புறவழிச்சாலைத் திட்டத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், முதற்கட்ட பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூர், பரமக்குடி வழித்தட தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலையில் முதுகுளத்தூர் பேரூராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள 15 வார்டுகளில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து அலுவலகங்கள், கடைகள் உள்ளதால் போக்குவரத்து மிகுந்த நகரமாக விளங்கி வருகிறது.இச்சாலை வழியாக நாள்தோறும் சுற்றுவட்டாரம், வெளியூர்களிலிருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனை போன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆன்மீக யாத்தீரிகர்களும் ராமேஸ்வரம், திருப்புல்லானி, தேவிபட்டிணம், திருஉத்தரகோசமங்கை, ஏர்வாடி, போன்ற ஆன்மீக தலங்களுக்கு இவ்வழியாக வந்து செல்கின்றனர். மேலும் திருச்செந்தூர், கன்னியாகுமரி, குற்றாலம், சபரிமலை செல்வதற்கும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். வாலிநோக்கம் அரசு உப்பளம், ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் சாயல்குடி கடற்கரை பகுதிகளிலிருந்து மீன், கருவாடு, உப்பு உள்ளிட்ட கடல்சார் பொருட்கள், கிராமபுறங்களிலிருந்து மரக்கரிகள், பனைமர பொருட்கள், விவசாய உற்பத்தி பொருள் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்கிறது. இதனால் கடலாடி,முதுகுளத்தூர் சாலையான மறவர் தெரு முதல் செல்வநாயகபுரம் பாலம் வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.மறவர் தெருவில் சாலையின் இருபுறம் வீடுகள், ஒருபுறம் கழிவுநீர் வாய்க்கால் என இருப்பதால் ஒரு வாகனம் வந்து செல்லும் போது மற்றொரு வாகனம் செல்ல முடியாத சூழ்நிலையால், வாகனங்கள் அணிவகித்து நிற்கும் நிலை உள்ளது. முதுகுளத்தூர் பஜார்க்குள் காலை, மாலை நேரங்கள், வாரச்சந்தை நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் வாரியம் அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன் சட்டமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பின் புற வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்து அரசானை வெளியிடப்பட்டு, முதற்கட்ட பணிக்காக ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நிலம் கையகப்படுத்தப்பட்டது. தனியார்களிடம் இருந்தும் நிலங்கள் வாங்கப்பட்டது. இதனையடுத்து பரமக்குடி சாலையிலுள்ள வேளாண்மை பொருள் சேமிப்பு கிடங்கிலிருந்து முதுகுளத்தூர் கண்மாய் கரை வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி வழித்தடம் வழியாக கடலாடி சாலையிலுள்ள நீதிமன்றம் வரையிலும் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்டல் சாலை அமைக்கப்பட்டு, தேவையான இடங்களில் பாலங்கள் கட்டும் பணி துவங்கி, துரிதமாக நடந்து வருகிறது. சுமார் 50 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் பொதுமக்கள், மாணவர்கள், அலுவலர்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2011ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டபேரவையில் முதுகுளத்தூரில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் அறிவித்தார். ஆனால் நிதி ஒதுக்கவில்லை. அடுத்ததாக 2017 நவ.25ல் ராமநாதபுரத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் முதுகுளத்தூரில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால் ஆட்சி முடியும் வரை அடுத்த கட்ட அறிவிப்பு இல்லை. இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, அமைச்சர் ராஜகண்ணப்பனின் அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததுடன் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது….

The post முதுகுளத்தூரில் ரூ.18 கோடியில் புறவழிச்சாலை பணிகள்: 50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: