கல்லலில் சந்தை கழிவுகளால் நோய் அபாயம்: இடம் மாற்றம் செய்ய கோரிக்கை

காரைக்குடி: கல்லலில் சந்தை கழிவுகளை குளத்தில் போட்டு விட்டு செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காரைக்குடி அருகே கல்லல் ஊராட்சியில் 6000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தனியார் இடத்தில் முன்பு வாரச்சந்தை போடப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவுவதை தடுக்க அச்சந்தை மூடப்பட்டு தற்போது, கோயில்வீதியில் உள்ள தெப்பகுளத்தை சுற்றி சந்தை போடப்பட்டு வருகிறது. ஒவ்வொரும் வாரம் வியாழன் அன்று நடக்கும் வாரச்சந்தையில் 200க்கும் மேற்பட்ட காய்கறி, மீன் கடைகள் போடப்படுகின்றன.

வேப்பங்குளம், குருந்தம்பட்டு, ஆலம்பட்டு உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு காய்கறி வாங்க வருகின்றனர். சந்தையில் சேரும் காய்கறி- மீன் கழிவுகளை தெப்பகுளத்தில் கொட்டிவிட்டு செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூகசேவகர் ஆறுமுகம் கூறுகையில், ‘அனைத்து ஊர்களிலும் கொரோனாவுக்காக இடம் மாற்றம் செய்யப்பட்ட சந்தைகள் அனைத்தும் மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றறப்பட்டு விட்டது. ஆனால் இங்கு மட்டும் இன்னும் மாற்றாமல் உள்ளனர்.

சந்தை கழிவுகளை முறையாக அகற்றுவது கிடையாது. அங்காங்கே குவித்து எரிக்கின்றனர்.  கழிவுகளை குளத்தில் போட்டுவிட்டு செல்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து குளத்தை தூர்வாரினேன்.

தற்போது கழிவுகளை போடுவதால் தண்ணீர் கெட்டுபோய் விடும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை.  தவிர போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் சந்தை செயல்படுவதால் இடையூறு ஏற்பட்டு வருகிறது.  கழிவுகளால் தொற்றுநோய் பரவுவதற்கு முன்னர் ஏற்கனவே செயல்பட்ட இடத்திற்கு சந்தையை மாற்ற வேண்டும் அல்லது இதற்கு என தனியாக இடம் ஒதுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: