‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு...’ அதிமுக நிர்வாகிகளை ஆட்டி படைக்குது நியூமராலஜி: அமைச்சர் முதல் அடித்தொண்டர் வரை மாற்றம்

சிவகாசி: விருதுநகர் மாவட்ட அதிமுகவினர் திடீரென தங்களது பெயர்களை நியூமராலஜிப்படி மாற்றிக் கொண்டு வருகின்றனர். `எண் கணித ஜோதிடம்’ என்றழைக்கப்படும் நியூமராலஜியில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள், தங்களுடைய பெயர்களை அடிக்கடி மாற்றிக் கொள்வது வழக்கம். திரைத்துறையில் இது மிகவும் பிரபலம். அழைப்பதற்கு ஸ்டைலாக இருக்க வேண்டுமென சிலரும், அதிர்ஷ்டத்தை நம்பி சிலரும் பெயரை மாற்றிக் கொள்வது உண்டு. அப்படித்தான், சிவாஜிராவ் கெய்க்வாட், ரஜினிகாந்த் என மாறினார். பாரதிராஜா தனது கதாநாயகிகளின் பெயரை ‘ஆர்’ என குறிப்பிடும்படி மாற்றுவதுண்டு. ராதா, ராதிகா, ரதி இப்படி இயற்பெயரை மாற்றிக் கொண்ட நடிகைகள் பலர் திரைத்துறையில் சாதித்துள்ளனர். இந்த நியூமராலஜி சிஸ்டம் அரசியலையும் விட்டு வைக்கவில்லை. ஒரு சிலர் நியூமராலஜி பார்த்தும், சிலர் தொண்டர்கள் விருப்பத்திற்காகவும் பெயரை மாற்றிக் கொள்கின்றனர்.

முன்னாள் தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசு தன் பெயரை திருநாவுக்கரசர் என்றும், மதிமுக பொதுச்செயலாளர் வை.கோபால்சாமி தனது பெயரை, அனைவராலும் அழைக்கப்படும் பெயரான ‘வைகோ’ என்று மாற்றிக் கொண்டார்.

 கடந்த சில நாட்களுக்கு முன்பு, துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத்குமார், தனது பெயரை ப.ரவீந்திரநாத் என்று மாற்றி கொண்டார். பாட்ஷா பட ஹீரோ பேசும், ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ என்ற வசனம் போல, தற்போது விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் தங்களது பெயரை நியூமராலஜிப்படி  மாற்றி வருகின்றனர். ராஜேந்திரன் என்பவரை உங்களுக்கு தெரியுமா? பரபரப்பான அரசியல்வாதி. மோடியை டாடி என்று கூறி பிரபலமானவர். ஆம்.. அவர்தான்.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

பெயர் மாற்றிய ராசியோ என்னவோ, அவர் அடுத்தடுத்த நிலைகளில் உயர, தற்போது அந்த மாவட்ட அதிமுக நிர்வாகிகளும், தங்களுக்கு ‘இன்னொரு பெயர் இருக்கு’ என்று கெத்தாக கூறுகின்றனர். துரைப்பாண்டி என்ற பெயர் கொண்டவர், தற்போது ராஜவர்மன் ஆகி சாத்தூர் எம்எல்ஏவாகி உள்ளார். இவர் மட்டுமா? ராஜபாளையம் நகர பேரவை செயலாளர் முருகேசன் தனது பெயரை  துரைமுருகேசன், மம்சாபுரம் நகர செயலாளர் அய்யனார் தனது பெயரை அய்யனார்ஜி, நரிக்குடி அதிமுக நிர்வாகியும், நடிகருமான கே.சி.பிரபாத் தனது பெயரை சி.பிரபாத்வர்மன் என்ற பெயரிலும் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

இதேபோன்று விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தங்களது பெயர்களை மாற்றி அமைத்து சமூக வலைத்தளங்களில் அவற்றை விளம்பரப்படுத்தி வருகின்றனர். திடீரென இந்த பெயர் மாற்றம் அரசியல் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெயரை மாத்தினா மட்டும் போதுமா? மக்களிடமும் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டுமென்கின்றனர் விருதுநகர் மாவட்ட மக்கள்.

Related Stories: