ஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம், கொலை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு உத்தரவு

ஹத்ராஸ்: உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினர், நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்படுகின்றனர். உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது தாழ்த்தப்பட்ட இளம்பெண், 5 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,  தாக்கப்பட்டதால் இறந்தார். இரவோடு இரவாக அவரது சடலத்தை போலீசார் எரித்ததால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. நாடு முழுவதும் கடும்  அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.  கடந்த முறை இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட போது, இளம்பெண்ணின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும், அவர்களை  திங்கட்கிழமை (நாளை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும்  மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக ஹத்ராஸ் மாவட்ட எஸ்பி வினீத் ஜெய்ஸ்வால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திங்கட்கிழமை  இளம்பெண்ணின் குடும்பத்தினர் ஆஜராகிறார்கள். இதற்காக, சிறப்பு அதிகாரியையும் நீதிமன்றம் நியமித்துள்ளது. அவர்களை நீதிமன்றத்துக்கு  அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை காவல்துறைசெய்து வருகிறது,’’ என்றார்.இந்நிலையில், இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்தும்படி, சிபிஐ.க்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி  ஆதித்யநாத் சமீபத்தில் பரிந்துரை செய்தார். இதை ஏற்றுள்ள மத்திய அரசு, வழக்கை விசாரிக்கும்படி சிபிஐ.க்கு நேற்று முறைப்படி உத்தரவு  பிறப்பித்தது.

Related Stories: