வங்கி கடன்களுக்காக அறிவிக்கப்பட்ட மாத தவணை சலுகையை மேலும் நீட்டிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

புதுடெல்லி: ‘கொரோனா ஊரடங்கால் அறிவிக்கப்பட்ட வங்கிக்கடன் மாத தவணை சலுகையை மேலும் நீட்டிக்க முடியாது. கூடுதலாக எந்தவித புதிய  சலுகைகளும் வழங்க முடியாது,’ என உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் முழு ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதனால், வங்கிகள்  மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணையை திருப்பி செலுத்துவதில் இருந்து மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் 31 வரை 6  மாத காலம் மத்திய அரசு அவகாசம் வழங்கியது. எனினும், 6 மாத மாதத்தவணை செலுத்தாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என்று  வங்கிகள் அறிவித்தன. இதனால், இச்சலுகையை பயன்படுத்திய பொதுமக்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கடும்  அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்கில்  மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மாதத் தவணை, வீட்டுக்கடன், சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாங்கிய ரூ.2 கோடி  வரையிலான கடன்களுக்கான. 6 மாதத்துக்கான வட்டிக்கு வட்டியை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டது.    இந்நிலையில், இந்த வழக்கில் ரிசர்வ்  வங்கியும் நேற்று தனது புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ரூ.2 கோடி வரையிலான அனைத்து  கடன்களுக்குமான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய ஒப்புக் கொள்வதாக தெரிவித்த மத்திய அரசின் அறிவிப்பை ஏற்றுகொள்கிறோம். ஆனால்,  வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை. அதேப்போல், கூடுதலாக புதிய சலுகையும்  வழங்க முடியாது.

இதனால் கடன் வாங்கியவர், வாங்குபவர் ஆகியோரின் நடத்தை முற்றிலும் பாதிக்கும்.  மேலும், பொருளாதார குற்றங்கள் மற்றும் அதுசார்ந்த  அபாயங்களை ஏற்படுத்தி விடும். இது போன்ற நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி விடும். தவணையை செலுத்த கூடுதல்  அவகசாம் வழங்குவதால் வரும் காலத்தில் பணப்புழக்க சிக்கல் ஏற்படும்.  கடன் தொகையை திருப்பி செலுத்த 2 ஆண்டுகள் கூட நீட்டிக்க முடியும்.  ஆனால், வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது. அவ்வாறு செய்வதால், அது வங்கி நடைமுறையில் பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தும்.இந்த விவகாரத்தில் வழங்கப்படும் வழிகாட்டுதல் என்பது முக்கியம்தான். ஆனால், அதில் எதுவும் கட்டாயமாக்கப்படக் கூடாது. ஏனெனில், எவ்வளவு  பெரிய கப்பலாக இருந்தாலும் தரைக்கு வரும் பட்சத்தில் கரை தட்டி தான் நின்று கொண்டிருக்க வேண்டும். அதனால், இந்த விவகாரத்தில் எங்கள்  கோரிக்கையை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 13ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

‘தடையை நீக்க வேண்டும்’

ரிசர்வ்  வங்கி தனது பிரமாண பத்திரத்தில், ‘கடந்த ஆறு மாதங்களாக கடனை திருப்பி செலுத்தாதவர்களின் கணக்குகளை வங்கி வாராக்கடன்  பட்டியலில் இணைக்கக் கூடாது, ஜப்தி முறையை பின்பற்றக் கூடாது என்று இதற்கு முன் பிறப்பித்த இடைக்கால தடையை நீதிமன்றம் நீக்க  வேண்டும்,’ என்று ம் கோரியுள்ளது.

* சலுகையை நீட்டித்தால், பொருளாதார குற்றங்கள் மற்றும் அதுசார்ந்த அபாயங்களை ஏற்படுத்தி விடும்.

* கடனை திருப்பி செலுத்த மறுக்கும் கலாசாரம் ஏற்பட்டு விடும்.

* வங்கி நடைமுறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.- ரிசர்வ் வங்கி  

Related Stories: