தொல்லியல் முதுகலை படிப்பில் தமிழ் புறக்கணிப்பு விவகாரம் எதிர்ப்பு இல்லாவிட்டால் தமிழ் மொழி சேர்க்கப்பட்டிருக்குமா?

* செம்மொழிகள் கூட  தெரியாத அதிகாரி யார்?

* ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்வி

மதுரை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அச்சாணி கிராமத்தை சேர்ந்த வக்கீல் ரமேஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த  மனு:மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில், உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம்  இயங்குகிறது. இந்நிறுவனம் சார்பில் தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டய படிப்பிற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.  இந்த படிப்புகளில் சேர இந்திய வரலாறு, தொல்லியல்துறை, மானுடவியல் மற்றும் தொல்லியல் மொழிகளான சமஸ்கிருதம், பாலி மற்றும் அரபு  மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.இந்த படிப்பிற்கான கல்வித்தகுதியில் செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழையும் இணைத்து புதிதாக அறிவிப்பு  வெளியிடக்கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்,  ‘‘தமிழ் மொழியையும் இணைத்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘முதலில் அறிவிப்பு வெளியிடும்போதே செம்மொழியான தமிழை ஏன் இணைக்கவில்லை? இந்த அறிவிப்பை எந்த அதிகாரி  தயாரித்தார்? அவருக்கு குறைந்தபட்சம் செம்மொழிகள் எவை என்பது கூடவா தெரியாது? இங்கு வழக்கு தாக்கலானது தெரிந்த பிறகே தமிழ் மொழியை  இணைத்துள்ளீர்கள்.

தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய பிறகுதான், இந்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொழிகளிலேயே பழமையான தமிழை மறந்து தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டது ஏன்? ஒருவேளை  இங்கிருந்து எதிர்ப்பு குரல் எழுப்பவில்லை என்றால் தமிழ்மொழி இணைக்கப்பட்டிருக்குமா?’’ என்று கேள்வி எழுப்பினர்.பின்னர், இந்த விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட  அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, மத்திய அரசு  தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக். 28க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: