லஞ்ச ஒழிப்பு பிரிவை பலப்படுத்த வேண்டும் நீதித்துறையில் ஊழலை ஏற்க முடியாது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: நீதித்துறையில் ஊழல் இருப்பதை ஏற்க முடியாது என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, லஞ்ச ஒழிப்புப் பிரிவை பலப்படுத்த வேண்டுமென  கூறியுள்ளது.நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றிய உலகராஜ், லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கடந்த 2007ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர்  கட்டாய ஓய்வாக மாற்றப்பட்டது. தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து உலகராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: அரசு ஊழியர்கள் நேர்மையாக பணியாற்ற வேண்டும். ஊழல் உள்ளிட்ட  எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகக்கூடாது. ஊழல் சமூகக் கொடுமையாகும். நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக ஊழல் உள்ளது. இந்த ஊழல்,  சமூகத்தில் குறிப்பாக ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது. ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென பல  வழக்குகளில் உத்தரவிடப்பட்டிருந்தாலும், ஊழல் வழக்குகளின் விசாரணை மெதுவாகவே நடக்கிறது.  

ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கல்ல. நீதித்துறையில் ஊழல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் கடைசி புகலிடம் நீதித்துறை. இங்கு  ஊழல் இருப்பதை சகிக்க முடியாது. நீதித்துறையில் உள்ள ஊழலை தடுக்க இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நீதித்துறையில்  உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவை  பலப்படுத்த வேண்டும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: