பாதாளசாக்கடை பணிக்காக 70 ஆண்டுகால சிமென்ட் சாலை உடைப்பு-மக்கள், சமூகஆர்வலர்கள் எதிர்ப்பு

காரைக்குடி :  காரைக்குடி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க அரசு ரூ.112 கோடியே 53 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து நபர் ஒருவருக்கு தினமும் 115 லிட்டர் கழிவுநீர் என கணக்கிடப்பட்டு கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் சேகரிக்க 5,559 ஆள் நுழைவு தொட்டிகள் கட்டப்படுகின்றன. 31 ஆயிரத்து 725 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளன.

கழிவுநீர் தேவகோட்டை ரஸ்தா சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு எதிரே அமைக்கப்படும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல சாலைகளில் குழி வெட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மிகவும் பழமையான ரயில்வே பீடர் சிமென்ட் சாலையை உடைத்து பாதாளசாக்கடை பணி குழாய் பதிக்கும் பணியை துவங்கி உள்ளனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்துள்ளனர்.

சமூக ஆர்வலர் ராசகுமார் கூறுகையில், கடந்த 1949ல் சுதந்திரத்துக்கு பின்னர் செட்டிநாட்டு கலாச்சர பழக்கத்தின்படி கடுக்காய், கருப்பட்டி போன்ற கலவையை பயன்படுத்தி இச் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. செட்டிநாடு பாரம்பரிய சின்னமாக இச்சாலை உள்ளது. 70 ஆண்டுகளில் இதுவரை சிறிய அளவில் உள்ள இச்சாலை உடையவில்லை.

பாதாளசாக்கடை பணிக்கு இச்சாலையை உடைக்க கூடாது என அதிகாரிகளிடம் நடந்த பேச்சுவார்தையில் முடிவு செய்யப்பட்ட நிலையில் ராட்சச இயந்திரம் கொண்டு உடைத்து உள்ளனர். ஒப்பந்தகாரரின் அத்துமீறிய செயலை கண்டித்து புகார் அளித்துள்ளோம். நகர் பகுதிமுழுவதும் பாதாளசாக்கடை பணியால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

Related Stories: