தீவளூர்-சாத்துக்குடல் இடையே ஆமை வேகத்தில் நடைபெறும் பாலம் கட்டுமான பணி-போக்குவரத்துக்கு வழியில்லாமல் பொதுமக்கள் அவதி

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே உள்ள தீவளூர், சாத்துக்குடல் வழியாக விருத்தாசலம்-பெண்ணாடம் நெடுஞ்சாலைப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் தீவளூர், சாத்துக்குடல், தாழநல்லூர், கோனூர், இளமங்கலம், ஆலிச்சிக்குடி உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெண்ணாடம் மற்றும் விருத்தாசலத்தில் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக சென்று வருகின்றனர்.

இந்நிலையில், தீவளூருக்கும், சாத்துக்குடலுக்கும் இடையே பல வருடத்திற்கு முன் கட்டப்பட்ட சிறுபாலம் இருந்து வந்தது. அது இடிந்து விழும் நிலையில் இருந்ததால் தற்போது அதனை அகற்றி விட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணி கடந்த 5 மாதத்திற்கு முன் தொடங்கப்பட்டது. இதற்காக தற்காலிக பாதை அமைக்கப்பட்டு அதன் மூலம் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு  விருத்தாசலம் பகுதியில் விடிய விடிய பெய்த  கனமழையின் காரணமாக அந்த பாலத்தின் வழியாக வந்த மழை நீர் தற்காலிக பாலத்தை அடித்துச் சென்று விட்டது. இதனால் போக்குவரத்திற்கு வழியின்றி அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியை விரைந்து நடத்த வேண்டும். அதுவரை பொதுமக்கள் விருத்தாசலம் மற்றும் பெண்ணாடம் சென்று வருவதற்கான போக்குவரத்து வழியை ஏற்படுத்தித் தர வேண்டும், என்றனர்.

Related Stories: