அதிகாலையில் வாகன சோதனையில் சிக்கியது; நெல்லையில் ரூ.60 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: நகைக்கடை அதிபர் உள்பட 4 பேரிடம் விசாரணை

நெல்லை: நெல்லை டவுனில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களிடம் கணக்கில் வராத பணம் ரூ.60 லட்சத்து 10 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். இது ஹவாலா பணமா என தொழிலதிபர்கள் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை பழையபேட்டை சாலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நெல்லை டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் ெகாண்்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி அதிலிருந்த இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வந்த காரை சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த ஒரு லெதர் பேக்கில் ரூ.16 லட்சம் பணம் கட்டு கட்டுகளாக இருந்தது. இது குறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ரூ.16 லட்சத்தையும், காரையும் கைப்பற்றினர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி மற்றும் போலீசார் காரில் இருந்த இருவரையும் டவுன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் இருவரும் தென்காசியை சேர்ந்த கல்யாணகுமார் (42), நெல்லை டவுனை சேர்ந்த ராமகிருஷ்ணன் (36) ஆகியோர் எனவும், கல்யாணகுமார் தென்காசியில் நகைக் கடை நடத்தி வருவதாகவும், தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக நெல்லை டவுனில் வட மாநிலத்தை சேர்ந்த ெஜயந்திலால் (33) என்பவரின் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கு சென்று ரூ.16 லட்சம் பெற்றதாகவும் தெரிவித்தனர். எனினும் கல்யாணகுமார் உண்மையிலேயே தொழிலை அபிவிருத்தி செய்ய தான் ரூ.16 லட்சத்தை பெற்றாரா? அல்லது யாரிடமாவது பணத்தை ஒப்படைக்க சென்றாரா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இவர்கள் இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில், நெல்லை டவுனிலுள்ள ஜெயந்திலால் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த கணக்கில் வராத ரூ.44 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஜெயந்திலால் (33) மற்றும் அவரது தந்தை ஹத்தேவ் சந்த் (61) ஆகியோரை போலீசார் டவுன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பணம் முழுவதும் கணக்கில் வராத ஹவாலா பணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் லட்சக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதும், அதற்கு கணக்கு இல்லாததும் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பணத்தை ஹவாலா போன்று யாரிடமாவது கொடுக்க அனுப்பப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து வருமானவரித் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் இறுதி விசாரணைக்கு பிறகே முழு தகவலும் தெரியவரும்.

Related Stories: