செங்கோட்டை பகுதியில் கஞ்சா போதைக்கு அடிமையாகும் ‘சிறுசுகள்’ : தமிழக - கேரள எல்லையில் கஞ்சா தாராளம்

செங்கோட்டை: தென்காசி மாவட்டம் செங்கோட்டை, புளியரை பகுதிகளில் பள்ளி மாணவர்கள் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை படுஜோராக நடக்கிறது. கஞ்சா போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் பைக் ரேஸ், திருட்டு என சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த சில நாட்களுக்கு முன் வடகரையை சேர்ந்த சிறுவர்கள் 4 பேர் மற்றும் ஒரு இளைஞர் சேர்ந்து வனப்பகுதியில் கஞ்சா புகைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்டம் வடகரை, மேக்கரை, செங்கோட்டை, புளியரை போன்ற பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இவர்களை குறிவைத்து பலர் போதை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.  போலீசாரும் இதனை கண்டு கொள்வதில்லை. பள்ளிக்கு செல்லாததால் மலையடிவார வன பகுதிகளில் வைத்து கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்துகின்றனர்.

சிறுவர்கள் கஞ்சா வாங்க தனது சொந்த வீட்டிலியே திருடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பெற்றோரே புகார் தெரிவிக்கும் நிலையில் உள்ளனர். மேலும் கஞ்சா பயன்படுத்திவிட்டு இருசக்கர வாகனங்களில் அளவுக்கு அதிக வேகத்தில் பைக் ரேஸில் ஈடுபடுகின்றனர். போலீசார் இதனை கண்டு கொள்ளாததால் இதுபோன்ற சிறுவர்களை உள்ளூர் ரவுடிகள் கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையாக்கி சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். தங்கள் செய்யும் குற்றம் என்ன என்பது தெரியாமலே சிறுவர்கள், இளைஞர்கள் ரவுகளுக்கு துணை போகின்றனர். இதனால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாய் உள்ளது.

எனவே, தென்காசி மாவட்ட போலீசார் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு கஞ்சா விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை, புளியரை, வடகரை, மேக்கரை போன்ற பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: