மதுரையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் சிறுநீரகத்தை தானமாக பெற்று நாகர்கோவில் விவசாயிக்கு பொருத்தம்: 2.15 மணி நேரத்தில் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டது

நாகர்கோவில்: மதுரையில் மூளைச் சாவு அடைந்த வாலிபரின் சிறுநீரகத்தை தானமாக பெற்று நாகர்கோவில் விவசாயிக்கு உடனடியாக பொருத்தினர். நாகர்கோவில் பறக்கை பகுதியை சேர்ந்த 45 வயது விவசாயி ஒருவருக்கு இரு சிறுநீரகங்களும் செயல் இழந்தன. இதனால் அவர் நாகர்கோவிலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்து வந்தார். அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த கடந்த 2016ல், தமிழக அரசிடம் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், மதுரையில் நடந்த விபத்தில் வாலிபர் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார்.

அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர். அதில் வாலிபரின் இரு சிறுநீரகங்களில், ஒரு சிறுநீரகத்தை பறக்கை விவசாயிக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று (7ம்தேதி) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து சிறுநீரகத்தை பெறுவதற்காக, நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் சென்றது. அங்கிருந்து சிறுநீரகத்துடன் ஆம்புலன்ஸ் நேற்று மதியம் 12.15 க்கு புறப்பட்டது. போக்குவரத்து இடையூறின்றி ஆம்புலன்ஸ் செல்வதற்கு மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.க்களின் உத்தரவின் பேரில் போலீசார் ஏற்பாடுகளை செய்தனர்.

சைரன் ஒலியுடன் முன்னால் போலீசார் வாகனம் செல்ல, பின்னால் ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் வந்தது. அதைத்தொடர்ந்து ஒரு காரும் வந்தது. நாகர்கோவில் தனியார் மருத்துவமனை அருகே வடசேரி பகுதியில் திடீரென ஆம்புலன்ஸ் பழுதானது. உடனடியாக பின்னால் வந்த காரில் சிறுநீரகம் உள்ள பெட்டி மாற்றப்பட்டு  மதியம் 2.30க்கு அதாவது 2.15 மணி நேரத்தில் மருத்துவமனைக்குள் சென்றது. அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிறுநீரகத்தை பெற்று விவசாயிக்கு வெற்றிகரமாக பொருத்தினர்.

Related Stories: