ஜார்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய் குற்றவாளி: டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: ஜார்க்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 1999ம் ஆண்டு முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்தவர் திலீப் ராய். இதில் அவர் பதவி வகித்த காலத்தின் போது ஜார்கண்ட் மாநிலத்தில் சிடிஎல் என்ற நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி மாவட்ட நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், வாதங்கள் அனைத்தும் முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் டெல்லி ரோஸ் அவனீவ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பாரத் பராசர் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில்,”கடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற நிலக்கரி ஊழலில் முன்னாள் அமைச்சர் திலீப் ராய் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணம் ஆகியுள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. தண்டனை விவரங்கள் வரும் 14ம் தேதி அறிவிக்கப்படும்’’ என்றார்.

Related Stories: