ஹத்ராஸ் பரபரப்பு ஓயும் முன்பாக அடுத்த பயங்கரம் உபி.யில் மற்றொரு இளம்பெண் பலாத்காரம் செய்து படுகொலை: உடல் பாகங்களை துண்டித்து நிலத்தில் வீச்சு

லக்னோ: ஹத்ராசில் இளம்பெண் பாலியல் பலாத்காரத்தால் கொல்லப்பட்ட பரபரப்பு ஓயும் முன்பாகவே, மற்றொரு இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, உடல் பாகங்கள் வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம், உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள் அதிகமாகி இருக்கின்றன. இம்மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட 19 வயது இளம்பெண், கடந்த மாதம் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டார். அவருடைய எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கு துண்டிக்கப்பட்டு இருந்தது. பல நாட்கள் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் கடந்த வாரம் அவர் இறந்தார்.

மேலும், குடும்பத்தினரிடம் கூட சடலத்தை ஒப்படைக்காமல், உத்தர பிரதேச போலீசார் இரவோடு இரவாக அதை எரித்தது மட்டுமின்றி, ‘அவர் பலாத்காரம் செய்யப்படவில்லை,’ என மறுநாள் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், அப்பெண்ணின் சாவுக்கு நீதி கேட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள், பெண்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹத்ராஸ் இளம்பெண் இறந்த அதே நாளில், உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூரில் மேலும் ஒரு தாழ்த்தப்பட்ட இளம்பெண்ணை 2 பேர் கும்பல் பலாத்காரம் செய்து, காலை உடைத்தது. இதில், அந்த பெண் பரிதாபமாக இறந்ததும் மேலும் பரபரப்பாகி இருக்கிறது.

இந்நிலையில், மற்றொரு மைனர் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உடல் பாகங்கள் வெட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த மாதம் 26ம் தேதி டெகத் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளம்பெண் திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக போலீசில் இந்த குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதில் அவர்கள், ‘நிலப் பிரச்னையால் உறவுக்காரர்களுடன் தகராறு இருந்தது. பிரச்னையின் போது எங்கள் உறவுக்கார வாலிபர்கள் 2 பேர், ‘உங்கள் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விடுவோம்’ என்று மிரட்டினார்கள்’ என்று கூறியிருந்தனர். அதனால், அந்த 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தரிசு நிலம் ஒன்றில் அந்த இளம்பெண்ணின் உடல் கிடப்பதாகத் நேற்று தகவல் கிடைத்தது. பெண்ணின் உடல் பாகங்கள் வெட்டப்பட்டு சிதறிக் கிடந்தன. மிகவும் கொடூரமானஅந்த காட்சியை பார்த்து, போலீசார் அதிர்ந்தனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார், அதை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். அவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டதாக கருதப்படுகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகே அது உறுதியாகும் என்று போலீசார் தெரிவித்தனர். உத்தர பிரசேசத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள இந்த இளம்பெண் பலாத்காரம், படுகொலை சம்பவங்களால் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

* எந்த சக்தியாலும் தடுக்க முடியாது

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பாதிக்கப்பட்ட இந்தியாவின் மக்களுக்காக ஒட்டு மொத்த நாடும் விழித்து எழுந்துள்ளது. எனவே, ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைப்பதை, இந்த பூமியிலுள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,’ என்று கூறியுள்ளார்.

* கலெக்டரை மாற்றுங்கள்

பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டியது மாவட்ட கலெக்டரின் கடமை. ஆனால், அநீதி இழைக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை ஹத்ராஸ் மாவட்ட கலெக்டர் மிரட்டி, தரக்குறைவாக நடத்தியுள்ளார். இது தொடர்பாக அவரை சஸ்பெண்ட் செய்து, விசாரிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

* வாலிபர்களை காப்பாற்ற முயற்சி

ஹத்ராஸ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்றதாக கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களும், உயர் பிரிவை சேர்ந்தவர்கள். அந்த பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என போலீசார் கூறிய நிலையில், இவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியில், இப்பிரிவை சேர்ந்த மக்கள் ஈடுபட்டுள்ளனர். பாஜ பிரமுகர் ஒருவரின் வீட்டில் இவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: