புதுவை அருகே சேதராப்பட்டில் மின்சார ஒயர் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: ரூ.20 கோடி பொருட்கள் நாசம்

வில்லியனூர்: புதுச்சேரி சேதராப்பட்டில் மின்சார ஒயர் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலனது. புதுச்சேரி வில்லியனூர் அருகே  சேதராப்பட்டு-பத்துக்கண்ணு சாலையில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான மின்சார காப்பர் ஒயர் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் மின் ஒயர்கள் ராக்கெட், நீர்மூழ்கி கப்பல் மற்றும் எல்லையில் பாதுகாக்க பயன்படும் உயரக தளவாட பொருட்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ரூ.1,500 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தனர். காந்திஜெயந்தி என்பதால் கம்பெனிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. வட இந்தியர்கள் கம்பெனியின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தபோது, நேற்று காலை 5 மணியளவில் கேபிள் தயாரிக்கும் இயந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உடனே, ஊழியர்கள் சேதராப்பட்டு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். புதுச்சேரி, வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். தொடர்ந்து 7 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் இயந்திரங்கள் மூலப்பொருட்கள் உள்ளிட்டவை ரூ.20 கோடிக்கு சேதமாகி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சேதராப்பட்டு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில்,  மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories: