சாலையில் சிதறிக்கிடந்த கொரோனா சளி, ரத்த மாதிரி ‘டெஸ்ட் டியூப்’கள்: ஆத்தூரில் ஊழியர்கள் அலட்சியம்

ஆத்தூர்,: ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட ரத்த மாதிரி, சளி மாதிரி கிட்டுகள், சிதறிக் கிடந்தது. சேலம் மாவட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ், நாள்தோறும் பல்வேறு இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம்கள்  நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று ஆத்தூர் அடுத்த  பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி 1வது வார்டு தண்ணீர்பந்தல் பகுதியில், கொரோனா தொற்று கண்டறிய எடுக்கப்பட்ட ரத்தம் மற்றும் சளி மாதிரி  டெஸ்ட் டியூப்கள் சாலையில் ஆங்காங்கே சிதறிக்கிடந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள், மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்துக்கு தகவல்  தெரிவித்தனர். உடனடியாக சுகாதாரத்துறை ஊழியர்கள், மாதிரிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி மொத்தம் 8 டெஸ்ட டியூப்கள் அங்கு  கைப்பற்றினர்.

இதுதொடர்பாக தலைவாசல் வட்டார மருத்துவ அலுவலர் பன்னீர்செல்வத்தை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது,  தலைவாசல் பகுதியில்  87 நபர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாவும், இரண்டு சுகாதார ஊழியர்கள் மூலமாக, டூவீலரில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டபோது, 8 மாதிரி கிட்டுகள் குறைவாக இருந்ததுதெரியவந்தது. இதையடுத்து, பட்டியலை கொண்டு சம்பந்தப்பட்ட 8 பேருக்கு மீண்டும்  பரிசோதனை மேற்கொண்டு, மாதிரி சேகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Related Stories: