10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள நிறுவனங்கள் கல்யாண மண்டபம், கட்டுமான பகுதிகள், மார்க்கெட்டுகளை கண்காணிக்க தனிப்படை: நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவு

சென்னை: பத்துக்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் உள்ள நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள்,  கட்டுமான பகுதிகள்,  மார்க்கெட்டுகளில் கொரோனா  விதிமீறல்களை கண்காணிக்க வார்டு வாரியாக 200 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் பலர் விதிகளை  கடைபிடிக்காமல் சுற்றி வருகின்றனர். இதையடுத்து கொரோனா தொடர்பான விதிகளை பின்பற்றாதவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையில்  தமிழக அரசு அவரச சட்டம் ஒன்றை பிறப்பித்தது. இதன்படி தனிமைப்படுத்துதலை மீறுபவர்களுக்கு ரூ.500, மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.200,  பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ.500, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500, நிலையான வழிகாட்டி  நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.500 அபராதம்  விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும்  இதுநாள் வரை மொத்தம் ரூ.2.30 கோடி  அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் 10க்கு மேற்பட்ட பணியாளர்கள் உள்ள நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள்,  கட்டுமான பகுதிகள்,  மார்க்கெட்டுகள்,  பெரிய தெருக்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் வகையில் தனிப்படை அமைக்க நகராட்சி நிர்வாக துறை உத்தரவிட்டது.இதன்படி சென்னை அனைத்து மண்டலங்களிலும் உதவி பொறியாளர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்,  துப்புரவு ஆய்வாளர்,  வரி வசூலிப்பவர்கள்  ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தகுழு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத  தனிநபர் அல்லது தொழில், வணிக மற்றும் இதர நிறுவனங்கள் மீது அபராதம் மற்றும்   சீல் வைப்பது உள்ளிட்ட  கடுமையான நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: