வன்முறை இல்லை, ஆயுதம் இல்லை, அமைதி போராட்டத்தை தடுத்தது ஏன்?... ராகுல் காந்தி கைது குறித்து ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க முயன்றதில் என்ன தவறு என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். உத்திரப்பிரதேசத்தில் இளம் பெண் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து விசாரணை நடத்தி வருகிறது. இதனால் அந்த கிராமம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த கிராமத்திற்குள் ஊடகங்களுக்கும் அனுமதி கிடையாது என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க அந்த கிராமத்திற்குச் செல்வதாக அறிவித்திருந்தனர். 144 தடை உத்தரவை மீறி பிற்பகல் வேளையில் ராகுலும், பிரியாங்காவும் சென்றதால், அவர்கள் சென்ற காரை அதிகாரிகளும், போலீஸாரும் வழிமறித்தனர். அப்போது காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மேலும் தடை உத்தரவை மீறி கிராமத்திற்குள் சென்ற குற்றத்திற்காக ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கைது செய்யபட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; வன்முறை இல்லை, ஆயுதம் இல்லை, அமைதி போராட்டத்தை தடுத்தது ஏன்?; அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க முயன்றதில் என்ன தவறு?; நாட்டின் சட்டங்கள் உத்தரப்பிரதேச காவல்துறைக்கு பொருந்தாதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: