உ.பி. இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம்: ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்ற காங். முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கைது

ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்று கொண்டிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். நொய்டா உத்திரப்பிரதேசத்தில் இளம் பெண் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஹத்ராஸ் என்ற அந்த இடத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நடந்து சென்றனர். உத்தர பிரதேசத்தில் அண்மையில், ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 19 வயத தலித் பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொல்லப்பட்ட பெண்ணின் கிராமமான ஹத்ராஸ் பகுதிக்கு செல்ல காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் செல்ல முயன்றனர். டெல்லியில் இருந்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். இங்கிருந்து ஹத்ராஸ்கிராமத்திற்கு வாகனத்தில் செல்ல சுமார் 1.30 மணி நேரம் ஆகும். இவர்கள் வருவதை ஒட்டி ஏராளமான காங்கிரசார் மற்றும் இளைஞர் காங்கிரசார் டெல்லியில் இருந்து செல்ல தயாராக இருந்தனர். பின்னர் டெல்லியில் இருந்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக புறப்பட்ட ராகுல், பிரியங்கா சென்ற வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் நடந்தே ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலமாக அவர்கள் சென்று கொண்டிருந்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் வந்த தொண்டர்களை உத்திரப்பிரதேச மாநில போலீசாரும் மற்றும் டெல்லி போலீசாரும் சேர்ந்து தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது. தடுத்து நிறுத்தியதன் காரணமாக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த தொண்டர்களை தடுக்க முடியாத காரணத்தால் அவர்களை அப்புறப்படுத்த தடியடி நடத்தினர். தொடர்ந்து நடைபெற்று வந்த வாக்குவாதத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: