லே-மணாலி இடையே உலகின் நீளமான அடல் சுரங்கப்பாதை: அக். 3-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.!!!

டெல்லி: உலகின் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதையை அக்டோபர் 3-ம் தேதி நாளை மறுநாள் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத்திட்டமாக இமாச்சல பிரதேசத்தின்  மணாலிக்கும் லடாக்கின் லே பகுதிக்கும் இடையே 9.02 கிலோ மீட்டர் நீளத்திற்கு, மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை ரோடங் பாதை என்றும், முன்னாள் பிரதமர் அடல் பிகார் வாஜ்பாயின் நினைவாக அடல்  சுரங்கப்பாதை எனவும் அழைக்கப்படுகிறது.

கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி ரோஹ்டங் சுரங்கப் பாதைக்கு சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார்.

தற்போது, அடல் ஹோஹ்டங் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை பத்து ஆண்டு கடும் உழைப்பின் சின்னமாக உருவாகியுள்ளது.  4 ஆயிரம்  கோடி ரூபாய் முதலீடும் சாலையை உருவாக்கியுள்ளது. அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதை, ஆஸ்திரியா நாட்டின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. 10  மீட்டர் அகலம் கொண்ட இரு வழிப்பதையாக இது அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3100 மீட்டர் உயரத்தில் இந்த பாதை உள்ளது. இந்தியாவின் மிக நீளமான சுரங்கச் சாலையாகக் கருதப்படுகிறது. மோட்டார் வாகனங்கள்  செல்லக்கூடிய உலகின் நீளமான சாலை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சுரங்கப்பாதையின் ஒவ்வொரு 60 மீட்டர் தொலைவிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும், ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவிலும் அவசரகால வெளியேறும்  சுரங்கம் உள்ளது.

இந்த சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வந்ததும், மணாலி-லே இடையிலான பயண தூரம் 46 கிலோ மீட்டர் குறையும். நேரம் சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை குறையும். மணாலி-லே நெடுஞ்சாலையில் உள்ள இந்த சுரங்கப்பாதையின் பணிகள்  முடிவடைந்துள்ள நிலையில், வரும் அக்டோபர் 3-ம் தேதி (நாளை மறுநாள்) பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தற்போது, திறப்பு விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Related Stories: