தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க எப்போது சட்டம் இயற்றப்படும்?: அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.!!!

சென்னை: தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க எப்போது சட்டம் இயற்றப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை அய்னாவரத்தில் இரு ரவுடி கும்பல்களுக்கு மோதல் ஏற்பட்டது. இதில் ஜோசப்  என்ற ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட வேலு என்பவர் தன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தை பொருத்தவரை ரவுடிகள், அரசியல் வாதிகள் உள்ளிட்ட பெருபாலானோர் இடம் சட்ட விரோதமாக  ஆயுதங்கள் இருப்பதாவும், ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவம் சமீப காலங்களாக அதிகரித்து வருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தார்கள்.

மேலும், சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் வள்ளநாட்டில் ரவுடிகளை பிடிக்க சென்ற காவலர் சுப்பிரமணியன் வெடுக்குண்டு வீசி தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தமிழக அரசு மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தவிர  வேறு எந்த எதிர்கட்சிகளும் பெரிதளவில் பேசவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். மேலும், தமிழகத்தை பொருத்தவரை ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனக்கூறி நீதிபதிகள் இது  தொடர்பாக பதிலளிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் முழுமையாக ஒழிக்கும் வகையில், ஒரு புதிய சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு உள்துறை  அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தரப்பில் அறிக்கை அளிக்கப்ட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், டிஜிபி அளித்த அறிக்கைப்படி, எப்போது, சட்டம் இயற்றப்படும்? எப்போது சட்டமன்றத்தில் இச்சட்டம் குறித்து விவாதிக்க உள்ளீர்கள்  என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.  

Related Stories: