வேளாண் படிப்புக்கு ‘என்ஓசி’ அவசியம் என்ற அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு: தலைமை நீதிபதி முன்பு 6ம் தேதி விசாரணை

சென்னை: தமிழக அரசின் தடையில்லா சான்று இல்லாமல் விவசாய படிப்புகளை தொடங்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணை 6ம் தேதி விசாரணை நடக்கிறது. தமிழகத்தில் உள்ள தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விவசாய படிப்புகள் துவங்க, தமிழக அரசின் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதுவரை மாணவர் சேர்க்கை நடத்த கூடாது எனவும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கோவையில் உள்ள காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், விவசாய படிப்புகளை தொடங்க பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி மட்டுமே போதுமானது. தமிழக அரசினுடைய தடையில்லா சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை. எனவே, அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழக அரசினுடைய உத்தரவை எதிர்த்து ஏற்கனவே இரண்டு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் சார்பில் தனி நீதிபதி முன்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவுக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணை வரும் 6ம் தேதிக்கு  தள்ளிவைத்ததுடன், தனி நீதிபதி முன்பு உள்ள வழக்குகளையும் இந்த வழக்கோடு சேர்க்குமாறு பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனர்.

Related Stories: