மெல்ல மெல்ல குறையும் தங்கம் விலை: சென்னையில் சவரன் ரூ.37,920-க்கு விற்பனை...நகை பிரியர்கள் ஆனந்தம்.!!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,000-க்கு கீழ் சென்றது. தங்கம் விலை கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது. கடந்த மாதம் 7ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,416க்கும், பவுன் ரூ.43,328க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை  என்ற சாதனையை படைத்து வந்தது. இந்த நிலையில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. தங்கம் விலை கடந்த 19ம் தேதி ஒரு சவரன் 39,664க்கு விற்கப்பட்டது.

அதன் பிறகு தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வந்தது. தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு 1,552 அளவுக்கு குறைந்தது. சவரன் 38 ஆயிரத்துக்குள் வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 25 அதிகரித்து ஒரு கிராம் 4,789க்கும், சவரனுக்கு 200 அதிகரித்து ஒரு சவரன் 38,312க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு 9 குறைந்து ஒரு கிராம் 4,780க்கும், சவரனுக்கு 72 குறைந்து ஒரு சவரன் 38,240க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. சனிக்கிழமை விலையிலேயே இன்று தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. இன்றைய காலை நிலவரப்படி; சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ.4,770-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு உயர்ந்து ரூ.62.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,000-க்கு கீழ் சென்றது. கிராமிற்கு ரூ. 30 குறைந்து ரூ.4,740-க்கும், ஒரு சவரன் ரூ.37,920 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசு உயர்ந்து ரூ.61.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories:

>