குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சட்டமன்ற செயலாளர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

சென்னை: குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு, தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்கு எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களுக்கு, சட்டமன்ற உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து, ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில் அப்போது, குட்கா எடுத்து சென்றதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும், தடைசெய்யப்பட்ட குட்கா தங்கு தடையின்றி பொதுவெளியில் கிடைக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே சட்டமன்றத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், இது வரை 18 எம்.எல்.ஏக்களும் பதிலளிக்கவில்லை என்பதால், நோட்டீசுக்கு தடை விதிக்கக்கூடாது என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார்.

இதனையடுத்து, தற்போது குட்கா விவகாரத்தில் சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் சார்பில் உரிமைக்குழு நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்தது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை, உரிமை மீறலா, இல்லையா என்பதை உரிமைக்குழுவே தீர்மானிக்கும் என்று மேல்முறையீடு மனுவில் வாதாடப்பட்டுள்ளது.

Related Stories:

>