திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியிறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவு: சிறிய தொட்டியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று கொடியிறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெற்றது. காலை கோயில் வளாகத்தில் உள்ள சிறிய தொட்டியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷவாகனம், அன்ன வாகனம், கற்பக விருட்சம், கருட வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கஜ வாகனம், குதிரை வாகனத்தில் காலை மற்றும் இரவில் கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். கொரோனா பரவல் காரணமாக மாடவீதிகளில் சுவாமி வலம் வருவது வரலாற்றில் முதன்முறையாக இந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், பிரமோற்சவத்தின் நிறைவு நாளான (9ம் நாள்) நேற்று காலை, கோயிலில் உள்ள அயன மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர் மற்றும் நறுமண திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக தெப்பக்குளத்தில் நடைபெறும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ரத்து செய்யப்பட்டது. அதற்கு மாற்றாக கோயிலுக்குள் உள்ள அயன மண்டபத்தில் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட சிறிய தொட்டியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வேதமந்திரங்கள் முழங்க நடந்தது. நேற்று மாலை கொடியிறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெற்றது.

* அக்டோபர் 16ம் தேதி 2வது பிரமோற்சவம்

இந்தாண்டு திருமலையில் 2 பிரமோற்சவங்கள் நடக்கிறது. அதன்படி, வரும் அடுத்த மாதம் 16ம் தேதி 2வது பிரமோற்சவம் தொடங்கி, 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த பிரமோற்சவத்திலாவது பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: