முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜ மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். முன்னாள் ராணுவ அதிகாரியான ஜஸ்வந்த் சிங், பாஜ. மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கினார். இவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சரவை பதவி வகித்தார். கடந்த 2014ம் ஆண்டு வீட்டில் தவறி கீழே விழுந்ததால் தலையில் காயமடைந்த அவர், டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோமா நிலைக்கு சென்ற அவர், அதிலிருந்து மீண்டார். கடந்த ஜூன் 25ம் தேதி மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு சொந்த மாநிலமான ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெற்றது. ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மூத்த ராணுவ வீரர், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர், சிறப்பு வாய்ந்த தலைவர், அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன்,’ என குறிப்பிட்டுள்ளார். மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜஸ்வந்த் சிங் நீண்ட காலம் நாட்டிற்காக பணியாற்றியவர். வாஜ்பாய் ஆட்சியின் போது பல முக்கிய துறைகளை கையாண்டவர். அரசியல் மற்றும் சமூக விஷயங்களில் அவரது தனித்துவமான அணுமுறையால் எப்போதும் நினைவு கூரப்படுவார்,’ என கூறியுள்ளார்.  

* ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டத்தில் கடந்த 1938ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி ஜஸ்வந்த் சிங் பிறந்தார்.

* இந்திய ராணுவத்தில் 1950ம் ஆண்டு முதல் 60ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

* 1980ம் ஆண்டு பாஜ நிறுவப்பட்டதில் இருந்து அதனுடன் தொடர்பில் இருந்தவர்.

* வாஜ்பாய் அரசில் நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு என 3 முக்கிய துறைகளிலும் மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

* கடந்த 2009ம் ஆண்டு ஜின்னா, இந்திய பிரிவினை, சுதந்திரம் உள்ளிட்ட புத்தகங்களை வெளியிட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 10 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கட்சியில் சேர்ந்த அவர் ,2014ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படாததால் கட்சியின் உத்தரவை மீறி சுயேச்சையாக போட்டியிட்டார். இதன் காரணமாக 2வது முறையாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

Related Stories: