பாபநாசத்தில் பக்தர்கள் குவிந்தனர்: படித்துறையில் குளிக்க திடீர் தடை

வி.கே.புரம்: பாபநாசத்தில் பக்தர்கள் குவிந்ததால் படித்துறையில் நேற்று காலை 10 மணி வரை குளிக்க திடீர் தடை விதிக்கப்பட்டது. டிஎஸ்பியின் கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டதால், பின்னர் தடை நீக்கப்பட்டது. பாபநாசம் தாமிரபரணி ஆற்றில், மகாளய அமாவாசையை முன்னிட்டு கடந்த 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை பொதுமக்கள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. 21ம் தேதி முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், வழக்கம்போல் ஆற்றில் குளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை நாளாக இருந்ததால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதையடுத்து பாபநாசம் கோயில் படித்துறையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு மற்ற இடங்களில் குளிக்க போலீசார் அனுமதி வழங்கினர். இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள், இவ்விவகாரத்தை அம்பை டிஎஸ்பி பிரான்சிஸ் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து படித்துறையில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளபட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாபநாசம் படித்துறையில் காலை 10 மணிக்கு மேல் குளித்து மகிழ்ந்தனர்.

Related Stories: