குமரி மாவட்டத்தின் முதல் பெண் ஐபிஎஸ்; ஆற்றூரை சேர்ந்த பிரபினா தேர்வு: வாய்ப்பு அமையவில்லை என்று தற்கொலை செய்வது முட்டாள் தனமானது என்கிறார்

குலசேகரம்: குமரி மாவட்டத்தின் முதல் பெண் ஐபிஎஸ் ஆக ஆற்றூர் பகுதியை சேர்ந்த பிரபினா தேர்வாகியுள்ளார். குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்துள்ள ஆற்றூர், மங்களாநடை பகுதியை சேர்ந்தவர் பிரேமசந்திரன். ஓய்வு பெற்ற சிறப்பு எஸ்ஐ. இவரது மனைவி ரெஜினாள். ஓய்வு பெற்ற தொடக்க பள்ளி தலைமையாசிரியர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. மகன் டால்வின் எம்பிஏ முடித்துவிட்டு பேட்மிண்டன் அகடாமி நடத்தி பயிற்சியாளராக உள்ளார். மகள் பிரபினா மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பிஇ படித்துவிட்டு கோவையிலுள்ள பயிற்சி மையத்தில் யுபிஎஸ்இ தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வந்தார்.

3 முறை தேர்வில் தோல்வியை தழுவிய இவர் 4 வது முறை ஐஆர்டிஎஸ் பணிக்கு தேர்வாகி தற்போது பயிற்சியில் உள்ளார். 5 வது முறையாக இந்திய குடிமை பணிகளுக்கான தேர்வு எழுதியதில் 445 வது இடம்பிடித்து ஐபிஎஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் பலர் ஐஏஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று புகழ்பெற்ற அதிகாரிகளாக திகழ்கின்றனர். ஆனால் இதுவரை பெண்கள் யாரும் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெறவில்லை. இதனால் குமரி மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை பிரபினா பெற்றுள்ளார்.

இதுகுறித்து பிரபினா கூறுகையில், எங்கள் சர்ச் பாதிரியார் ஒருவர் நான் 5 ம் வகுப்பு  படிக்கும்போது எனது சுறுசுறுப்பை கண்டு நீ ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என அடிக்கடி கூறுவார். அது என் மனதில் ஆழமாக பதிந்தது. அன்று அவர் போட்ட விதை என்னை ஐஏஎஸ் கனவுக்கு கொண்டு சென்றது. இதற்கு எனது பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். இதனால் 5 முறை முயற்சி செய்து தற்போது ஐபிஎஸ் ஆக தேர்வு பெற்றுள்ளேன். கடின உழைப்பு இருந்தால் எதிலும் வெற்றி பெற முடியும். நிறைய பேர் வாய்ப்பு அமையவில்லை என்று  தற்கொலை என்னும் முட்டாள் தனமான முடிவுக்கு செல்கின்றனர்.

அது முடிவல்ல எதையும் சவாலாக எடுத்து மாற்று பாதையில் பயணித்து சாதிக்க வேண்டும். குமரி மாவட்டத்தின் முதல் பெண் ஐபிஎஸ் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. பெண்கள் பெண்ணியம் மட்டும் பேசி கொண்டிருக்க கூடாது. பெண்ணியத்தை சாத்தியபடுத்த வேண்டும். குடிமை பணிகளில் பெண்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆண்களுக்கு பெண்கள் நிகரானவர்கள். ஆண், பெண் என்ற பேதமில்லை. பெண்கள் எல்லா துறைகளிலும் சாதிக்கலாம். நான் பணியில் சேர்ந்ததும் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு நேர்மையாக செயல்பட்டு இந்த துறையில் சாதித்து காட்டுவேன் என்று கூறினார்.

Related Stories: