வேளாண் மசோதாக்களை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு: பஞ்சாப்பில் விவசாய சங்கம் அறிவிப்பு

சண்டிகர்: எதிர்க்கட்சிகள், விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 சர்ச்சைக்குரிய மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை விவசாய சங்கங்கள் நடத்திய நிலையில், பஞ்சாப்பில் நேற்றும் 3வது நாளாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அமிர்தசரசில் அரை நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.  இது பற்றி கிசான் மஸ்தூர் சங்கர்ஸ் குழுவின் பொதுச்செயலாளர் சர்வான் சிங் பந்தர் அளித்த பேட்டியில், ‘‘3 வேளாண் மசோதாக்களும் திரும்பப் பெறப்படும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும். கடந்த 24ம் தேதி தொடங்கிய 3 நாள் ரயில் மறியல் போராட்டம், வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது,’’ என்றார். ரயில் மறியல் போராட்டத்தால், பஞ்சாப்புக்கு இயக்கப்படும் 28 ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. சரக்கு சேவையும் பாதித்துள்ளது.

விவசாயிகளுக்காக குரல் கொடுங்கள்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்படி மக்களுக்கு நேற்று அழைப்பு விடுத்தார். இதற்காக, ‘விவசாயிகளுக்காக பேசுங்கள்’ என்ற பெயரில் அவர்  தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடி அரசின் விவசாயிகளுக்கு எதிரான அட்டூழியங்கள், சுரண்டல்களுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்,’ என கூறியுள்ளார். விவசாயிகள் நேற்று முன்தினம் நடத்திய தேசிய அளவிலான முழு அடைப்பு போராட்டத்துக்கும் ராகுல் ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: