வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம் துவங்கியது: இன்று மாநிலம் தழுவிய பந்த்

சண்டிகர்: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாபில் விவசாயிகள் 3 நாள் ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கினர். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சர்ச்சைக்குரிய 3 வேளாண் மசோதாக்களுக்கு  எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என ஜனாதிபதியிடம் 18 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் நேற்று முன்தினம் மனு அளித்தனர். மேலும், மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் செப்டம்பர் 24 முதல் 26ம் தேதி வரை மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும், இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் 31 விவசாய சங்கங்கள் கூட்டாக அறிவித்தன.

அதன்படி, பஞ்சாபில் நேற்று காலை முதல் ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. பாரதிய கிசான் சங்கம், கிசான் மஸ்தூர் சங்கராஷ் உள்ளிட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள், மாநிலத்தின் பல பகுதிகளில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், சிறப்பு மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே மட்டும் இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை, சரக்கு போக்குவரத்து பாதித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இப்போராட்டத்தில் விவசாயிகள் மட்டுமே பங்கேற்கின்றனர். அரசியல் கட்சிகள் எதுவும் கலந்து கொள்ளக் கூடாது என விவசாய சங்கங்கள் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த ரயில் மறியல் போராட்டம் நாளை வரை நடக்கிறது. அதேபோல், இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தையும் விவசாயிகள் நடத்துகின்றனர். மேலும், இன்றும் வரும் 1 தேதியும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

Related Stories: