கேரளாவில் 2015ல் எதிர்க்கட்சிகள் கடும் ரகளை சட்டப்பேரவையில் நாற்காலி, கணினிகளை உடைத்த வழக்கை ரத்து செய்ய முடியாது

திருவனந்தபுரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அமைச்சர்கள், மாஜி எம்எல்ஏ.க்களுக்கு சிக்கல்

திருவனந்தபுரம்: ‘கேரள  சட்டப்பேரவையில் எம்எல்ஏ.க்கள் ரகளையில்  ஈடுபட்டு, பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கை ரத்து செய்ய முடியாது,’ என திருவனந்தபுரம் நீதிமன்றம் கூறியுள்ளது.  கேரளாவில் கடந்த உம்மன்சாண்டி தலைமையிலான  காங்கிரஸ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் கே.எம்.மாணி. இவருக்கு  எதிராக அப்போதைய மார்க்சிஸ்ட் தலைமையிலான எதிர்க்கட்சிகள், மது பார்களுக்கு  லைசென்ஸ் வழங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் கூறினர். இதையடுத்து  கே.எம்.மாணி பதவி விலகக்கோரி போராட்டமும் நடத்தியது.

இந்நிலையில்,  கடந்த 2015 மார்ச் 13ம் தேதி கே.எம்.மாணி கேரள சட்டசபையில் பட்ஜெட்  தாக்கல் செய்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளி செய்தன. தற்ேபாதைய தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன்,  உயர்கல்வித் துறை அமைச்சர் ஜலீல், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் உட்பட பலரும்  கடும் ரகளையில் ஈடுபட்டனர். சபாநாயகர்  நாற்காலியை தூக்கி  கீழே வீசினர்.  கணினிகளும்  சேதப்படுத்தப்பட்டன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள்  ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த தொடர்பாக, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் உட்பட 15 பேர்  வழக்கில் சேர்க்கப்பட்டனர்.  தற்போதைய அமைச்சர்களான ஜெயராஜன், ஜலீல், அப்போதைய எம்எல்ஏ.க்கள் அஜித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. ₹2.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்  சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு  திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து  வந்தது. பின்னர் இடதுமுன்னணி ஆட்சிக்கு வந்தும், இந்த வழக்கை ரத்து செய்யும்படி அரசு சார்பில்  நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு  வந்தது. அப்போது கேரள அரசின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து  உத்தரவிட்டது. ‘சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டசபையில் பொதுச்சொத்துக்கு சேதம்  விளைவிக்கும் காட்சிகளை பொதுமக்கள் நேரடியாக டிவி.க்களில் பார்த்துள்ளனர் இந்த  சம்பவத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அது சமூகத்துக்கு  தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்,’ என தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்தார்.

மேல்முறையீடு

தங்க கடத்தல், தீவிரவாதிகள் பதுங்கல் உட்பட  பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்து வரும் கேரள அரசுக்கு, இந்த உத்தரவு மேலும்  பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து ேகரள  உயர் நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யும் என தெரிகிறது.

Related Stories: