ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தால் 30 நிமிடத்தில் குழந்தைகளை உயிருடன் மீட்கும் கருவி கண்டுபிடிப்பு: கொரோனா வேலையிழப்பு காலத்தை பயன்படுத்தி தொழிலாளி சாதனை

நாகை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை 30 நிமிடத்தில் உயிருடன் மீட்கும் 6 வகையிலான கருவியை நாகையை சேர்ந்த தொழிலாளி கண்டுபிடித்துள்ளார். வேளாங்கண்ணி செட்டித்தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன்(40). லேத்பட்டறை வைத்துள்ள இவர், ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை உயிருடன் மீட்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் எந்த வகையில் சிக்கி கொண்டிருந்தாலும் அந்த குழந்தையை உயிருடன் மீட்பதற்காக 6 வகையான கருவிகளை கண்டுபிடித்துள்ளார். இதில் ஒவ்வொரு கருவியுடன் சி.சி.டி.வி. கேமராவை பொருத்தி அந்த கேமராவை லேப்டாப்பில் இணைப்பு கொடுத்துள்ளார்.

குழந்தையை மீட்கும் கருவி செல்லும்போது கண்காணிப்பு கேமரா மூலம் ஆழ்துளை கிணற்றில் குழந்தை எவ்வளவு அடி ஆழத்தில் உள்ளது. எந்த சூழ்நிலையில் குழந்தை உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதேபோல் அந்த மிஷின், குழந்தையை நெருங்கியவுடன் குழந்தையை பாதுகாப்பாக தூக்குவதற்கு வசதியாக கைகள் போன்று வடிவமைப்பு செய்துள்ளார். குழந்தை விழுந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருந்து கொண்டு லேப்டாப் வாயிலாக கண்காணித்து மிஷினில் பொருத்தியுள்ள கைகளை வசதிக்கு ஏற்ற மாதிரி விரித்து குழந்தையை கவ்வி தூக்கிகொண்டு வரமுடியும். இதனால் குழந்தை எவ்வளவு தூரமாக இருந்தாலும், எவ்வளவு எடையாக இருந்தாலும் கீழே விழாமல் இருக்கும் வகையில் வடிவமைப்பு செய்துள்ளார்.

இதுகுறித்து நாகேந்திரன் கூறியதாவது: கடந்த ஆண்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். அவனை மீட்க பல நாட்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை. இதனால் வேதனையடைந்த நான், குழந்தையை உயிருடன் மீட்கும் கருவியை வடிவமைக்க தொடங்கினேன். லேத் பட்டறை வைத்துள்ளதால் கொரோனா காலத்தில் எனக்கு வேலை இல்லை. இந்த நேரத்தில் கருவியை வடிவமைக்க தொடங்கினேன்.

இரவு, பகலாக முயற்சி செய்து எவ்வளவு அடி ஆழத்தில் விழுந்தாலும், எந்த கோணத்தில் குழந்தை விழுந்தாலும் மீட்கும் வகையில் 6 வகையிலான கருவியை கண்டுபிடித்தேன். அந்த கருவியை பலமுறை பொம்மையை வைத்து பரிசோதனை செய்து பார்த்தேன். அதில் எனக்கு முழு வெற்றி கிடைத்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றவுடன் 30 நிமிடத்தில் குழந்தையை என்னால் உயிருடன் மீட்க முடியும். இந்த கருவியை பயன்படுத்த அரசு அனுமதி தர வேண்டும்.

Related Stories: