தமிழக கவர்னருடன் பாஜ தலைவர் திடீர் சந்திப்பு

சென்னை,:கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் இன்று திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ தனித்து போட்டியிட்டால் 60 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் பாஜ தலைவர் எல்.முருகன் கூறியது அதிமுக கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்கு பதிலடி கொடுத்த முதல்வர் பழனிசாமி, ‘ஜார்ஜ் கோட்டையில் அதிமுக கொடிதான் நிரந்தரமாக பறக்கும்’ என்று கூறியது பாஜவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், தி.நகரில் நடந்த நிகழ்ச்சியில், குதிரையில் ஊர்வலமாக சென்ற எல்.முருகன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அதேபோன்று கோவையிலும் அவருக்கு நடந்த வரவேற்பில் போக்குவரத்து விதிகளை மீறியதாக போலீசார் வழக்கு பதிந்தனர். மேலும் சமீபத்தில் பாஜவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர். தமிழக காவல் துறையின் இந்த நடவடிக்கையால் அதிமுக மீது பாஜவினர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் பாஜ தலைவர் எல்.முருகன், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று திடீரென சந்தித்து பேசினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜ நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘இவர்களது சந்தித்து மரியாதை நிமித்தமானது தான்’என்று கூறினர்.

Related Stories: