மாணவி கொலையில் கொத்தனார் கைது நகை பறிக்கும்போது கூச்சலிட்டதால் கத்தரிக்கோலால் குத்தி கொன்றேன்: பரபரப்பு வாக்குமூலம்

பூந்தமல்லி: மாணவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பி.ஜி.அவென்யூ, 4வது தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் மீனா (20), கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்றதால், வீட்டில் மீனா மட்டும் தனியாக இருந்துள்ளார். இவர்களது வீட்டின் மேல்தளத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில், வேலைக்கு சென்ற தனலட்சுமி, மகள் மீனாவை செல்போனில் தொடர்பு கொண்போது, சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால், பக்கத்து வீட்டு பெண்ணை தொடர்புகொண்டு, இதுபற்றி தெரிவித்துள்ளார்.

அவர் சென்று பார்த்தபோது, கழுத்தில் கத்தரிக்கோலால் சரமாரி குத்தப்பட்ட நிலையில் மீனா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டு பெண், இதுபற்றி தனலட்சுமியிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, மீனா கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் செயின் மற்றும் செல்போன் காணவில்லை. தகவலறிந்து வந்த போலீசார், மீனாவின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், மீனா வீட்டில் வேலை செய்த கொத்தனார் சண்முகம் (42) மாயமானது தெரிந்தது. போரூரில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றபோது, பூட்டிக்கிடந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்தக்கரை படிந்த சட்டை மற்றும் ஒரு செல்போன் இருந்தது. அது மீனாவின் செல்போன் என தெரியவந்தது. திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த சண்முகத்தை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது:

கடந்த சில நாட்களாக மீனா வீட்டில் கொத்தனார் வேலை செய்து வந்தேன். எனக்கு பணத்தேவை இருந்ததால், வீட்டில் தனியாக இருக்கும் மீனாவிடம் நைசாக பேசி, அவர் அணிந்திருந்த செயினை பெற்றோருக்கு தெரியாமல் பெற திட்டமிட்டேன். அதன்படி, நேற்று முன்தினம் வீட்டில் பெற்றோர் இல்லாதபோது, மீனாவிடம் சென்றேன். அங்கு கட்டுமான வேலை செய்பவர் என்பதால் எனக்கு டீ போட்டு கொடுத்தார். அதை குடித்துவிட்டு, எனது கஷ்டத்தை சொல்லி, உனது செயினை கழட்டி கொடு. பிறகு திருப்பி தந்து விடுகிறேன், என்றேன்.

அதற்கு மீனா  மறுத்ததால், வலுக்கட்டாயமாக செயினை பறித்தேன். ஆத்திரமடைந்த மீனா கூச்சலிட்டதால் வாயை பொத்தினேன். ஆனாலும் கூச்சலிட்டதால், பயத்தில் என்ன செய்வது என தெரியாமல் அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து மீனா கழுத்தில் குத்தினேன். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கியதும், அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின் மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு நண்பரின் பைக்கில் தப்பினேன். பின்னர், அய்யப்பந்தாங்கலில் உள்ள நகை கடையில் செயினை அடகு வைத்து, பணத்துடன் பைக்கிலேயே திருவண்ணாமலையில் உள்ள வீட்டிற்கு சென்றேன். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: