திருப்பூர் அரசு மருத்துவமனை ICU-வில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் பலி: முதல்வர் பழனிசாமி ஆட்சியின் இலட்சணம் இது...மு.க.ஸ்டாலின் டுவிட்

சென்னை: திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடப் பணிகள் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டுக்குச் செல்லும் மின் ஒயர், கட்டிடப் பணியால் துண்டானதாகத் தெரிகிறது. இதனால், மின்சாரம் இன்றி, செயற்கை சுவாசம் அளிக்கப்படாமல் இன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் திருப்பூர் பெருமாநல்லூர் சாலை  முருகானந்தபுரத்தைச் சேர்ந்தவர் யசோதா, பெருமாநல்லூர் சாலை வெங்கடேஸ்புரத்தைச் சேர்ந்தவர் கௌரவன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இருப்பினும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான  கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. கொரோனா வார்டுக்குச் செல்லக்கூடிய மின்சாரக் கம்பிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், சுமார் 40  நிமிடம் மின்சாரம் இல்லை. மாற்று ஏற்பாடுகள் இருந்ததால் ஆக்ஸிஜன் தடைப்படவில்லை. மின்சாரம் இல்லாத நேரத்தில் அவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உயிரிழக்க மின்சாரம் இல்லாதது காரணம் இல்லை என்று விளக்கம்  அளித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் உடல் நிலை முடியாதவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். மின்சாரக் கம்பிகள் துண்டிக்கப்பட காரணமாக இருந்தவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இருவர் மரணம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திருப்பூர் அரசு மருத்துவமனை ICU-வில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர்  உயிரிழந்திருக்கிறார்கள். மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை!. முதல்வர் பழனிசாமி ஆட்சியின் இலட்சணம் இது!. கொரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும்  அரசாக மாறிவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: